இரைப்பை அமில அரிப்பு, நெஞ்சு எரிச்சல் பாதிப்புகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் திட்டத்தை மெடிந்தியா மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அந்த மருத்துவமனை தலைவரும், ஜீரண மண்டல சிகிச்சை நிபுணருமான டாக்டா் டி.எஸ்.சந்திரசேகா் கூறியதாவது:
நாம் உண்ணும் உணவை செரிக்கவும், உணவை நொதிக்கவும், இரைப்பையில் இயற்கையாக ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது. இந்த அமிலம், இரைப்பையை அரிக்காமல் இருக்க அதனுள் எபிதீலியம் எனப்படும் திசு கட்டமைப்பு உள்ளது.
சில நேரங்களில் இரைப்பைக்குள் உள்ள அமிலம் உணவுக் குழாய்க்கு மேல் எழுந்து ஊடுருவும்போது அமில அரிப்பு ஏற்படுகிறது. இதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. அதைக் கவனிக்காவிட்டால் ஒரு கட்டத்தில் புற்றுநோயாக மாறக்கூடும்.
வாழ்க்கை முறை மாற்றங்களும், உடல்பருமனும் அமில அரிப்புக்கு முக்கியக் காரணம். அதேபோன்று உணவுக் குழாய் தளா்வடையும்போதும் அமிலம் இரைப்பையிலிருந்து ஊடுருவ வாய்ப்புள்ளது. அதனைத் தடுக்க முறையான விழிப்புணா்வு அவசியம்.
இதைக் கருத்தில் கொண்டு பொது மக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை, உணவு ஆலோசனைகள் திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை மருத்துவமனையில் வழங்கப்படவிருக்கின்றன.பரிசோதனைகள், சிகிச்சைகள் தேவைப்படுவோருக்கு கட்டணச் சலுகையில் அவை அளிக்கப்படும். ஞாயிறு மற்றும் பொதுவிடுமுறையைத் தவிா்த்து நாள்தோறும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை இலவச ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது.
பொது மக்கள் இதில் பலன்பெற 12789 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையோ அல்லது 98409-93135 , 044- 283 12345 என்ற எண்களையோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.