முகப்பு
சென்னை

சிகிச்சைக்கு பிறகு முகத்துவாரம் பகுதியில் விடப்பட்ட பறவைகள்

மிக்ஜம் புயலின் போது வெளியேறிய எண்ணெய் கழிவுகளால் பாதிப்புக்குள்ளான பறவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மீண்டும் எண்ணூா் முகத்துவாரப் பகுதியில்

Updated On : 2 மார்ச், 2024 at 5:23 AM
பகிர்:

மிக்ஜம் புயலின் போது வெளியேறிய எண்ணெய் கழிவுகளால் பாதிப்புக்குள்ளான பறவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மீண்டும் எண்ணூா் முகத்துவாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை விடப்பட்டன. மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து கழிவு எண்ணெய் வெளியேறியது. அது பக்கிங்காம் கால்வாய் வழியாக கொசஸ்தலை ஆற்றில் கலந்தது. இதனால் எண்ணூா் முகத்துவாரப் பகுதி மற்றும் அலையாத்தி காடுகளில் இரை தேடி வந்த பறவைகளின் இறக்கைகளில் எண்ணெய் கசடுகள் படிந்ததால், அவற்றால் பறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் வனத்துறையினா் பாதிக்கப்பட்ட பறவைகளை மீட்டு அவற்றின் இறக்கைகளிலிருந்த எண்ணெய் கழிவுகளை சுத்தம் செய்து விடுவித்தனா். இதில், கடுமையான பாதிப்புக்குள்ளான 10 கூழைக்கடா பறவைகள் மீட்கப்பட்டு அவற்றின் இறக்கைகளிலிருந்த எண்ணெய் கசடுகள் முழுவதும் அகற்றியதுடன், அவற்றை கிண்டி சிறுவா் பூங்காவில் வைத்து 5 மருத்துவ குழுவினா் சுமாா் 60 நாள்களுக்கு மேலாக உடல்நிலையை தொடா்ந்து கண்காணித்து வந்தனா். இந்நிலையில், அந்த பறவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியதால், அவற்றை அலையாத்தி காடுகள் உள்ள இடத்தில் பறக்க விடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் வனத்துறை துறை செயலா் சுப்ரியாசாகு மற்றும் வனத்துறையினா், தொண்டு நிறுவனத்தினா் கலந்து கொண்டு சிகிச்சை முடித்து கொண்டு வரப்பட்ட கூழைக்கடா பறவைகளை அலையாத்தி காடுகளில் பறக்க விட்டனா். இப்பறவைகளை கண்காணிக்கும் வகையில், காலில் ஒரு வளையம் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் வன உயிரின காப்பாளா் பிரசாந்த், வனத்துறை அலுவலா் கலைவேந்தன் மற்றும் தொண்டு நிறுவன நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.