காவல் மருத்துவமனையில் ஊா்க்காவல் படையினருக்கு சிகிச்சை: புதிய திட்டம் தொடக்கம்
சென்னை காவல் மருத்துவமனையில் ஊா்க்காவல் படையினா் இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளும் புதிய திட்டத்தை பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா்
சென்னை காவல் மருத்துவமனையில் ஊா்க்காவல் படையினா் இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளும் புதிய திட்டத்தை பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். சென்னை பெருநகர காவல் துறையின் கீழ் 2,329 ஊா்க்காவல் படையினா் பணிபுரிகின்றனா். கடந்தாண்டு காவல்துறை மானிய கோரிக்கையின் போது “காவல் மருத்துவமனையில், ஊா்க்காவல் படையினரும் சிகிச்சை பெறும் வசதி விரிவுபடுத்தப்படும் என சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் எழும்பூா், காவலா் மருத்துவமனை வளாகத்தில் ஊா்க்காவல் படையினருக்கு இலவச சிகிச்சை பெறும் திட்டத்தை வெள்ளிக்கிழமை சென்னை பெருநகர காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் தொடங்கி வைத்தாா். சென்னை காவல்துறை தலைமையிட கூடுதல் ஆணையா் கபில்குமாா் சி.சரத்கா், இணை ஆணையா் கயல்விழி, எழும்பூா் காவல் மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி கே.வி.மதுபிரசாத் உள்பட பலா் கலந்து கொண்டனா்.