திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் சென்னை காவல் ஆணையரை மாற்ற வேண்டும்: பாஜக புகார்
திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் சென்னை பெருநகர காவல் ஆணையர் அருணை மாற்றக்கோரி பாஜகவினர் புகார் குறித்து...
சென்னை: திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் சென்னை பெருநகர காவல் ஆணையர் அருணை மாற்றக்கோரி தமிழ்நாடு தலைமை தேர்தல்அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் பாஜகவினர் புகார் அளித்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதன்மைத் தேர்தல் அதிகாரியிடம், ஊடகப் பணியாளர்களுக்கு தொந்தரவு அளித்ததாகக் கூறி சென்னை பெருநகர காவல் ஆணையர் அருணை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பாஜகவினர் புகார் அளித்தனர்.
முன்னாள் டிஜிபி பாலச்சந்திரன், பாஜக சட்டப்பிரிவு தலைவர் குமாரகுரு, முன்னாள் சட்டப்பிரிவு தலைவர் சௌந்தரராஜன் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் நரசிம்மராவ் ஆகியோர் கொண்ட குழு, தமிழ்நாடு முதன்மைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அவர்களை சந்தித்து புகார் மனுவை வழங்கினர்.
Advertisement
Advertisement
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமாரகுரு,
“சென்னை காவல் ஆணையர் அருணை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். சமீபகாலமாக யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடும் ஊடகவியலாளர்கள் மீது சட்டவிரோதமாக சமன் அனுப்பி அச்சுறுத்தி வருகின்றனர்" என்றார்.
மேலும், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கார்த்திக் என்ற யூடியூபரை அழைத்து விசாரணை நடத்தி, குறிப்பிட்ட விஷயங்களில் செய்தி வெளியிடுவது குறித்து மிரட்டியதாகவும் குற்றம்சாட்டினார். இது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என்றும் பல இடங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் சட்டவிரோத நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
இதையடுத்து பேசிய முன்னாள் எம்.பி நரசிம்ம ராவ், “முதல்வர் ஸ்டாலின் காவல்துறையை அரசியல் நோக்கில் பயன்படுத்தி வருகிறார். எதிர்மறையான கருத்துகளை வெளியிடும் யூடியூபர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது காவல்துறை மூலம் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இது சட்டவிரோதமானதும் ஜனநாயகத்திற்கு விரோதமானதும் ஆகும்” என தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமை தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளோம். தேவையானால் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் எடுத்துச் செல்வோம். உடனடியாக நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க சென்னை காவல் ஆணையரை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். இதனை பரிசீலிப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததாக அவர் கூறினார்.
Chennai Police Commissioner, who acts in support of the DMK government, must be transferred: BJP complains to the Chief Electoral Officer
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.