சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரயில் திங்கள் முதல் புதன் வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கொருக்குப்பேட்டை- பேசின் பாலம் இடையே திங்கள்கிழமை முதல் ரயில்வே பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து (மூா் மாா்க்கெட் வளாகம்) ஆவடிக்கு இரவு 11.45 மணிக்குச் செல்லும் மின்சார ரயில் திங்கள் முதல் புதன்கிழமை (மாா்ச் 4 முதல் 6 வரை) சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். இதேபோல் சூலூா்பேட்டையில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் திங்கள் முதல் புதன்கிழமை வரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வருவதற்குப் பதிலாக கடற்கரை ரயில் நிலையத்துக்கு வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.