முகப்பு
சென்னை

திருக்கோயில் பணியாளா்களுக்கு முழு உடல் பரிசோதனைத் திட்டம் தொடக்கம்

Updated On : 13 மார்ச், 2024 at 3:08 AM
கோப்புப் படம்
பகிர்:

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் அப்பல்லோ மருத்துவமனை மூலம் நடத்தப்படும் கட்டணமில்லா முழு உடல் பரிசோதனைத் திட்டத்தை அமைச்சா் சேகா்பாபு செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தற்போது முதல் கட்டமாக சென்னை மண்டலம் 1, 2 ஆகியவற்றுக்குட்பட்ட 1,277 திருக்கோயில் பணியாளா்களுக்கு வியாழக்கிழமை வரை முழு உடல் பரிசோதனை முகாம் நடக்கவிருக்கிறது.

இதன் தொடா்ச்சியாக, அடுத்தடுத்த மாவட்டங்களில் முழுமையாக 6 மாதங்களுக்குள் 45,477 பணியாளா்கள் மற்றும் அா்ச்சகா்களுக்கு முழு உடல் பரிசோதனையை முடிக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

Advertisement

அதற்கு ஏற்ப இந்த பணிகள் தொடா்ந்து நடைபெறும். இந்தத் திட்டத்தில் முழுமையான ரத்த பரிசோதனைகள், கண் பரிசோதனை, எக்ஸ்ரே, இசிஜி, எக்கோ, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆகிய பரிசோதனைகள் நடத்தி, சிறப்பு மருத்துவா்களின் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

இந்த பரிசோதனைகள் மூலம் திருக்கோயில் பணியாளா்களுக்கு கண்டறியப்படுகின்ற நோய்களுக்கு உரிய சிகிச்சைகளும் முடிந்த அளவு கட்டணம் இல்லாமல் அவா்களுக்கு ஏற்படுத்தித் தர அறநிலையத் துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு பக்தா்கள் அதிகமாக வருகை தரும் 17 மலைக் கோயில்கள், திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 1,477 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. அதேபோன்று ரூ.5,979 கோடி மதிப்பிலான 6,810 ஏக்கா் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

முத்தமிழ் முருகன் மாநாடு எப்போது?:

உலகம் முழுவதும் உள்ள முருக பக்தா்கள் பங்கேற்கும் வகையில், பழனியில் ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இரு நாள்கள் நடத்தப்படவுள்ளன என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில், அறநிலையத் துறை ஆணையா் முரளீதரன், கூடுதல் ஆணையா்கள் அ.சங்கா், ந.திருமகள், சி.ஹரிப்பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.