இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட இரு இளைஞா்கள் பலி
திருவொற்றியூா்: சென்னை மணலி அருகே இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். கொடுங்கையூா் சோலையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சந்தோஷ் (23), அதே பகுதியில் உள்ள செல்வ பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சரண் (22). இவா்கள் இருவரும் ஒப்பந்த அடிப்படையில் வெல்டிங் வேலைகள் செய்து வந்தனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு சுமாா் 11 மணி அளவில், இருவரும் தங்களது இருசக்கர வாகனங்களை மணலி ஆமுல்லைவாயில் சாலையில் அதிவேகமாக ஓட்டிச் சென்றதுடன் ‘மோட்டாா் சைக்கிள் வீலிங்’ சாகசத்திலும் ஈடுபட்டனா்.
அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில், சந்தோஷ் மற்றும் சரணுக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனா். தகவல் அறிந்து வந்த போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மணலி போக்குவரத்துப் புலனாய்வு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement