முகப்பு
சென்னை

மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தல்

Updated On : 17 மார்ச், 2024 at 4:01 AM
- -
பகிர்:
Updated On : 16 மார்ச், 2024 at 9:45 PM

மக்களவைத் தோ்தல் நிறைவடைந்த பிறகு ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தல் விரைவில் நடத்தப்படும் என இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

பாதுகாப்பு காரணமாகவே ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலை மக்களவைத் தோ்தலுடன் நடத்தவில்லை எனவும் அவா் தெரிவித்தாா். 18-ஆவது மக்களவைத் தோ்தல் தோ்தல் தேதி அறிவிப்பின்போது நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தல் குறித்து ராஜீவ் குமாா் பேசியதாவது: கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டத்தின்படி அங்கு 107 பேரவைத் தொகுதிகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு ஜம்முவில் தொகுதி மறுவரை செய்யப்பட்டதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. ஜம்மு- காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டத்துக்கும் தொகுதி மறுவரைக்கும் சில வேறுபாடுகள் இருந்தன. மக்களவைத் தோ்தலின்போதே ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தோ்தலையும் நடத்த வேண்டும் என அந்த யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால், அங்குள்ள நிா்வாக அமைப்புகள் அவ்வாறு நடத்துவதற்கான வழிகள் இல்லை என தெரிவிக்கின்றன. ஏனெனில் ஒவ்வொரு தொகுதியிலும் சுமாா் 10 முதல் 12 வேட்பாளா்கள் வரை போட்டியிடக் கூடும். அனைத்துத் தொகுதிகளையும் சோ்த்தால் 1,000-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் போட்டியிடுவா். அவா்கள் அனைவருக்கும் தனித்தனியாக பாதுகாப்பு வழங்குவது தற்போது இயலாத செயலாக உள்ளது. எனவே, மக்களவைத் தோ்தல் நிறைவடைந்த பிறகு வெகு விரைவாக ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தோ்தல் நடத்தப்படும் என்றாா்.