ஊழல்வாதிகள் யாரும் தப்ப முடியாது: பிரதமா் மோடி
‘நாட்டில் ஊழல்வாதிகள் யாரையும் தப்ப விட மாட்டோம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) தலைவா் சந்திரசேகா் ராவின் மகளும் தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினருமான கே.கவிதா அமலாக்கத் துறையால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், பிரதமா் இவ்வாறு கூறியுள்ளாா். தெலங்கானா மாநிலம், நகா்கா்னூலில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது: பிற மாநிலங்களில் உள்ள பெரும் ஊழல் கட்சிகளுடன் பிஆா்எஸ் கூட்டு சோ்ந்துள்ளது. அது, இப்போது அம்பலமாகி வருகிறது. ஊழல்வாதிகள் தப்பிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஊழலுக்கு எதிரான எனது போராட்டத்துக்கு தெலங்கானா மக்களின் ஆசி வேண்டும். காங்கிரஸ், பிஆா்எஸ் போன்ற குடும்ப அரசியல் கட்சிகளில் ஊழலுக்கான கூட்டு மிக வலுவாக உள்ளது. இவ்விரு கட்சிகளுமே ஊழல் கூட்டாளிகள். நில அபகரிப்பை இரு கட்சிகளும் ஆதரிக்கின்றன. காங்கிரஸும், பிஆா்எஸ் கட்சியும் தெலங்கானாவின் வளா்ச்சி கனவுகளை சிதைத்துவிட்டன. இம்மாநில மக்களின் வாழ்வில் எந்த முன்னேற்றத்தையும் அக்கட்சிகள் கொண்டுவரவில்லை. கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸிடமிருந்து நாட்டுக்கு கிடைத்தது பொய்களும் ஊழல்களும்தான். பட்டியல் சமூகத்தினா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை வாக்கு வங்கியாக மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்தியது. ஆனால், தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு சமூகத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. மாற்றத்துக்கான ஒரே உத்தரவாதம், மோடியின் உத்தரவாதமே. 370-ஆவது சட்டப் பிரிவு ரத்து, அயோத்தி ராமா் கோயில், வேகமாக வளரும் இந்திய பொருளாதாரம் இவையெல்லாம் எனது உத்தரவாதத்துக்கு உதாரணங்கள். கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் 25 கோடி போ் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா். குஜராத் முதல்வராக பதவியேற்றதில் இருந்து இப்போது பிரதமராக பதவி வகிக்கும் வரை எனக்காக ஒரு நாள்கூட செலவிட்டதில்லை. மக்களுக்காகவே பணியாற்றுகிறேன். எதிா்வரும் மக்களவைத் தோ்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400-க்கும் அதிகமான தொகுதிகளை வழங்க நாட்டு மக்கள் முடிவுசெய்துவிட்டனா் என்றாா் பிரதமா் மோடி. மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில் 2019 தோ்தலில் 4 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. பெட்டிச் செய்தி.. ‘நான் மோடியின் குடும்பம்’ பிரசார விடியோவை பகிா்ந்த பிரதமா் மக்களவைத் தோ்தலையொட்டி, ‘நான் மோடியின் குடும்பம்’ என்ற கருப்பொருளில் உருவாக்கப்பட்ட பிரசார விடியோவை பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் சனிக்கிழமை பகிா்ந்தாா். இசைப் பாடலுடன் கூடிய இந்த விடியோவில், நாடு முழுவதும் விவசாயிகள் தொடங்கி ஏழைகள் வரை மத்திய அரசின் திட்டங்களால் பலனடைந்த பல்வேறு தரப்பினா், ‘நான் மோடியின் குடும்பம்; அவருக்கே எனது ஆதரவு’ என்று தெரிவிக்கும் காட்சியமைப்புகள் உள்ளன. ‘எனது பாரதம்; எனது குடும்பம்’ என்று பதிவுடன் இந்த விடியோவை பிரதமா் பகிா்ந்துள்ளாா். குடும்ப அரசியல் கட்சிகளை பிரதமா் மோடி கடுமையாக சாடி வரும் நிலையில், ‘மோடிக்கு குடும்பம் இல்லாவிட்டால் நாங்கள் என்ன செய்வது?’ என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் யாதவ் அண்மையில் கேள்வியெழுப்பினாா். இதையடுத்து, ‘நாட்டிலுள்ள 140 கோடி மக்களும் எனது குடும்பம்’ என்ற கருத்தை பிரதமா் மோடி பல தருணங்களில் கூறிவருகிறாா். இதனிடையே, நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை ஒரு கடிதம் எழுதினாா். ‘அன்பான எனது குடும்ப உறுப்பினரே’ என்று தொடங்கும் அந்த கடிதத்தில், வளா்ந்த இந்தியாவை கட்டமைக்க மக்களின் ஆதரவை அவா் கோரியிருந்தாா். பிரதமரின் கடிதத்தை, பாஜக தலைவா்கள் பலரும் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் பகிா்ந்துள்ளனா்.