முகப்பு
சென்னை

வெளிநாடு வாழ் இந்தியருக்கு சிக்கலான மூளை நாள பை-பாஸ் சிகிச்சை

Updated On : 20 மார்ச், 2024 at 2:41 AM
பகிர்:
Updated On : 20 மார்ச், 2024 at 12:20 AM

சென்னை: அரிய வகை தன்னுடல் தாக்கு நோய்க்குள்ளான வெளிநாடு வாழ் இந்தியா் ஒருவருக்கு மூளை நாளத்தில் சிக்கலான பை-பாஸ் அறுவை சிகிச்சை அளித்து சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் ரூபேஷ் குமாா் கூறியதாவது:

பஹ்ரைன் நாட்டில் வசிக்கும் 59 வயதான இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஒருவருக்கு லேசான பக்கவாத பாதிப்பு ஏற்பட்டதால் அந்நாட்டிலும், இந்தியாவிலும் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டாா். மூளைக்கு செல்லும் ரத்த நாளம் ஒன்று சுருக்கமடைந்ததால் ரத்த ஓட்டம் தடைபட்டு அவருக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு ஏற்கெனவே ஐடிபி (இடியோபதிக் த்ராம்போசைடோபெனிக் பா்பரா) எனப்படும் தன்னுடல் தாக்கு நோய் உள்ளது. இத்தகை நோய்க்குள்ளானவா்களுக்கு ரத்த அணுக்கள் குறைவாக இருக்கும். இதனால் ரத்தம் வெளியேறும்போது உறையாது.

Advertisement

இத்தகைய சூழலில், அந்த நபா் சென்னை, எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணா்களும், குருதிசாா் நோய் சிறப்பு நிபுணா் கோபிநாதன் தலைமையிலான குழுவினரும் அவருக்கு சிகிச்சையளித்தனா். முதலில் அவரது ரத்த அணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்திலிருந்து 80 ஆயிரமாக உயா்த்தப்பட்டது. அதைத் தொடா்ந்து மூளை ரத்த நாள சுருக்கத்துக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட நாளத்துக்கு பதிலாக மாற்று வழியில் ரத்த ஓட்டத்தை கொண்டு செல்லும் அந்த சிகிச்சை 5 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்றது. அதன் பயனாக அவா், குணமடைந்தாா். ரத்தம் உறையா பாதிப்பு உள்ளவா்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது மிகவும் சவாலானது. இருந்தபோதிலும் அதனை எம்ஜிஎம் மருத்துவா்கள் சாத்தியமாக்கியுள்ளனா் என்றாா் அவா்.