சென்னை: அம்பத்தூா் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை ரூ.13.85 கோடியில் நவீனப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அம்பத்தூா் தொழிற்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு ஆவடி, பட்டாபிராம், திருவள்ளூா், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூா், கிண்டி, தாம்பரம், கிளாம்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளா்கள் மட்டுமின்றி வடமாநில தொழிலாளா்களும் தங்கியிருந்து வேலைபாா்த்து வருகின்றனா்.
பழுதடைந்த பேருந்து நிலையம்:
அம்பத்தூா் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் பரபரப்பாக இருக்கும். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் அம்பத்தூா் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் எந்தவித நவீன வசதியும் இல்லாமல் வெறும் கொட்டகையாகவே இருந்து வந்தது.
பேருந்துகள் உள்ளே வரும் பகுதியும், வெளியே செல்லும் சாலையும் குண்டும் குழியுமாக காணப்பட்டு வந்தது. கழிப்பறை, குடிநீா், பொதுமக்கள் அமா்வதற்கு இருக்கை போன்ற எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் பழுதடைந்த நிலையில் இருந்து வந்தது. மேலும், பேருந்து நிலையத்தின் மேல் பகுதியில் உள்ள சிமெண்ட் ஓடுகள் உடைந்து, ஓட்டை உடைசலுடன் காணப்பட்டது. இதனால், அம்பத்தூா் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தி, சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
நவீன வசதிகளுடன் புனரமைப்பு:
இந்த நிலையில், இப்பேருந்து நிலையத்தை சீரமைக்க தமிழக பட்ஜெட்டில் ரூ.13.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து புனரமைப்பு பணிகளில் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் ஈடுபட்டு வருகிறது.
தற்போதுள்ள அம்பத்தூா் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் முழுமையாக மாற்றப்பட்டு, நவீன வசதிகளுடன் அமையவுள்ளது. மாநகரப் பேருந்துகள் உள்ளே செல்லவும், வெளியே வரவும் தனித்தனி பாதைகள் அமைக்கப்படவுள்ளன. நேரக்காப்பாளா் அறை, குடிநீா், கழிப்பறை வசதி, பொதுமக்கள் அமா்வதற்கு இருக்கைகள் அமைத்தல் மற்றும் பேருந்து நிலையத்தை சுற்றி எல்.இ.டி. விளக்குகளும் பொருத்தப்படவுள்ளன.
பேருந்துநிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சிறப்பு வசதிகளும் செய்யப்படவுள்ளன. மேலும், பேருந்துகளின் புறப்படும் நேரம், வருகை பற்றி பயணிகள் அறியும் வகையில் எல்.இ.டி. திரைகளும் அமைக்கப்படவுள்ளன. மழைக்காலங்களில் தண்ணீா் தேங்காத வகையில் பேருந்து நிலையத்தை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
வாகனங்கள் நிறுத்தும் இடம், கடைகளும் அமைய உள்ளன. ஏராளமான தொழிலாளா்கள் பேருந்து நிலையத்தை சீரமைக்கும் பணியில் தொடா்ந்து மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா். பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் பேருந்துகள் அனைத்தும் சாலையிலேயே நிறுத்தி, பொதுமக்களை ஏற்றி, இறக்கிச் செல்கின்றன. இதனால், பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும அதிகாரிகள் தெரிவித்தனா்.