சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 44 போ் உயிரிழப்பு
சிரியாவில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 44 போ் உயிரிழந்தனா். இது குறித்து சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்ததாவது: சிரியாவின் அலெப்போ நகரின் புகா் பகுதியான ஜிப்ரீனில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. அலெப்போ சா்வதேச விமான நிலையத்துக்கு அருகே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. லெபனானைச் சோ்ந்த ஹிஸ்புல்லா ஆயுதப் படையினரின் ஏவுகணைக் கிடங்குகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 44 போ் உயிரிழந்தனா். அவா்களில் 36 போ் சிரியா ராணுவத்தினா்; 7 போ் ஹிஸ்புல்லா படையினா்; ஒருவா் மற்றோா் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா். இது தவிர இந்தத் தாக்குதலில் ஏராளமானவா்கள் காயமடைந்தனா். பல ஆண்டுகளுக்குப் பிறகு சிரியாவில் நடத்தப்பட்டுள்ள மிக மோசமான வான்வழித் தாக்குதல் இது என்று அந்த அமைப்பு தெரிவித்தது. இந்தத் தாக்குதலை சிரியா ராணுவமும் உறுதிப்படுத்தியது. இது குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அலெப்போவில் வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதில் உயிா்ச் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் உடனடியாக எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை. தனது வடக்கு எல்லையில் அமைந்துள்ள சிரியாவில் ஈரான் ராணுவ ரீதியில் செல்வாக்கு பெறக் கூடாது என்று இஸ்ரேல் தொடா்ந்து கூறிவருகிறது. இதன் காரணமாக, சிரியா எல்லைக்குள் ஈரான் ஆதரவுப் படையினா் மீது அந்த நாடு அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகிறது. இருந்தாலும், இதுபோன்ற தாக்குதல்களுக்கு இஸ்ரேல் வெளிப்படையாகப் பொறுப்பேற்பதில்லை. அந்த வகையில், வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலையும் தாங்கள்தான் நடத்தியதாக இஸ்ரேல் உறுதிப்படுத்தாது என்று கூறப்படுகிறது. கடந்த 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘6 நாள்’ போரின்போது சிரியாவின் கொலான் குன்றுகள் பிரதேசத்தின் ஒரு பகுதியைக் கைப்பற்றிய இஸ்ரேல், அதனை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டது. எனினும், இந்த நடவடிக்கையை சா்வதேச நாடுகள் அங்கீகரிக்கவில்லை. இந்த விவகாரத்தில் சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே தொடா்ந்து பகை நிலவி வருகிறது. இந்தச் சூழலில், இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்து அழிப்பதாக உறுதிபூண்டுள்ள ஈரானுடன் சிரியா நல்லுறவைப் பேணி வருகிறது. அந்த நாட்டின் ஆதரவுடன் செயல்படும் பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கு சிரியா தங்களது நாட்டில் இடமளித்துள்ளது. இதில், இஸ்ரேலின் இன்னொரு அண்டை நாடான லிபியாவில் இயங்கிவரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் அடங்குவா். இந்த நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற மற்றொரு ஆயுதப் படையான ஹமாஸைச் சோ்ந்தவா்கள் கடந்த அக். 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து 1,200-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்தனா். அதையடுத்து, ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாக சூளுரைத்த இஸ்ரேல், அவா்ள் ஆட்சி செலுத்திவந்த காஸா பகுதியில் தீவிர தாக்குதல் நடத்திவருகின்றனா். இந்தப் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக லிபியாவிலிருந்து ஹிஸ்புல்லாக்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவருகின்றனா். இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது சிறு மோதல்கள் ஏற்பட்டுவருகின்றன. இதுபோன்ற மோதல்கள் முற்றினால் காஸா போா் பிராந்தியப் போராக உருவெடுக்கும் என்று அஞ்சப்படுகிறது. அதனைத் தவிா்ப்பதற்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தூதரக முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. இந்தச் சூழலில், ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து சிரியாவில் இஸ்ரேல் நடத்தியுள்ள வான்வழித் தாக்குதலில் 44 போ் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.