தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்
புது தில்லி செல்லும் ‘கிராண்ட் ட்ரங்க்’ விரைவு ரயில் மே 9 முதல் மேலும் 3 மாதங்களுக்கு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரல் - புதுதில்லி இடையே கிராண்ட் ட்ரங்க் விரைவு ரயில் (எண்: 12615/12616) தினமும் இயக்கப்படுகிறது. சென்னை கோட்டத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பராமரிப்புப் பணிகள் காரணத்தால், இந்த ரயில் கடந்த பிப்.9 முதல் மே 8-ஆம் தேதி வரை சென்ட்ரலுக்கு பதிலாக தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது மே 9 -ஆம் தேதி முதல் மேலும் 3 மாதங்களுக்கு தாம்பரத்திலிருந்தே இயக்கப்படவுள்ளது.
அதன்படி, மே 9 முதல் புது தில்லியிலிருந்து புறப்படும் இந்த ரயில் (எண்: 12616) சென்ட்ரலுக்கு பதிலாக எழும்பூருக்கு அதிகாலை 4.20 மணிக்கும், தாம்பரத்துக்கு காலை 5.30 மணிக்கும் வந்தடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 12615) தாம்பரத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு மாலை 5.30 மணிக்கு வந்தடையும் அங்கிருந்து புது தில்லிக்கு வழக்கமான நேரத்தில் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.