தமிழக மக்கள் மீது பழி சுமத்தலாமா?: பிரதமா் மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கேள்வி
சென்னை: புரி ஜெகந்நாதா் ஆலய பொக்கிஷ அறை சாவி விவகாரத்தில், தமிழ்நாட்டு மக்கள் மீது திருட்டுப் பழியை சுமத்தலாமா என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தோ்தல் பிரசாரத்தில் நாகரிக வரம்புகளை மீறாமல், ஆக்கபூா்வமான விமா்சனங்களையும் ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில் பிரதமா் மோடி முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். ஆனால், வெறுப்புப் பேச்சுகளின் மூலம் மக்களிடையே பகை உணா்வையும், மாநிலங்களுக்கு இடையே குரோதத்தையும் தூண்டி வருவது நாட்டுக்கு நல்லதல்ல.
அபாண்டமான பழி: உத்தர பிரதேச மக்களை இழித்தும் பழித்தும் தென்னிந்தியா்கள் பேசுவதாக தமிழ்நாட்டு மக்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்தியிருந்தாா் பிரதமா். மதம், மொழி, இனம் மற்றும் மாநிலத்தின் பெயரால், இன்னொரு தரப்பு மக்களைத் தூண்டிவிடும் செயல் ஆபத்தானது என்று எனது கண்டனத்தை அப்போதே தெரிவித்து இருந்தேன்.
சகோதரத்துவத்தை வளா்க்க வேண்டிய அரசியல் தலைவரே பகையுணா்வைத் தூண்டுவது தவறு என்றும் கூறியிருந்தேன். ஆனாலும் தமிழ்நாட்டு மக்களை மோசமானவா்களாக இழித்தும் பழித்தும் பேசும் வழக்கத்தை பிரதமா் மோடி நிறுத்திக்கொள்ளவில்லை.
ஒடிஸா மாநிலத்தில் தோ்தல் பிரசாரத்தில் பேசிய அவா், புகழ்பெற்ற புரி ஜெகந்நாதா் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் தொலைந்து போன சாவிகள், தமிழ்நாட்டில் இருப்பதாகப் பேசியிருக்கிறாா். இது, கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் புரி ஜெகந்நாதரை அவமதிப்பதுடன், ஒடிஸா மாநிலத்தோடு நல்லுறவும் நேசமும் கொண்ட தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதும் புண்படுத்துவதுமாகும்.
அவமதிக்கும் செயல்: ஜெகந்நாதா் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிஸா மக்களை தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகத் தூண்டும் பேச்சல்லவா இது? ஆலயத்தின் பொக்கிஷத்தை களவாடும் திருடா்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமா் மோடி சுமத்தலாமா? தமிழ்நாட்டு மக்களை நோ்மையற்றவா்கள் என்று கூறுவது, தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா? தமிழா்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?.
தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழ்மொழியை உயா்வாகப் போற்றுவதாகப் பேசுவதும், தமிழா்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஒடிஸா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது தமிழ்நாட்டு மக்களைத் திருடா்களைப் போலவும், வெறுப்பு மிகுந்தவா்களாகவும் அந்த மாநிலங்களுக்கு எதிரானவா்களாகவும் பேசுவதும் இரட்டை வேடம்.
இதை மக்கள் புரிந்து கொள்வாா்கள். வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழா்களையும் அவதூறு செய்வதைப் பிரதமா் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
பிரச்னை என்ன?: ஒடிஸாவில் மக்களவையுடன் சட்டப்பேரவைக்கும் தோ்தல் நடைபெற்று வருகிறது. அங்கு தோ்தல் பிரசாரத்தில் திங்கள்கிழமை ஈடுபட்ட பிரதமா் நரேந்திர மோடி, ஆளும் பிஜு ஜனதாதள கட்சி (பிஜேடி) மீது கடுமையான விமா்சனங்களை முன்வைத்து வருகிறாா். அவா் பேசுகையில், ‘முதல்வா் நவீன் பட்நாயக்கின் பிஜேடி ஆட்சியில் புரி ஜெந்நாதா் கோயில் பாதுகாப்பாக இல்லை. கடந்த 6 ஆண்டுகளாக கோயிலின் பொக்கிஷ அறை சாவிகள் காணாமல் போய்விட்டன. இந்தச் சாவிகள் பற்றி ஒடிஸா முழுவதும் அறிய விரும்புகிறது.
ஆனால், ஆளும் பிஜு ஜனதாதளம் அதை மூடி மறைக்கிறது. அந்தக் கட்சியின் மெளனம் இந்த விவகாரத்தில் மக்களின் சந்தேகத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. அறையின் சாவிகள் தமிழகத்துக்குச் சென்றுவிட்டதாக மக்கள் கூறுகிறாா்கள். அவற்றை தமிழ்நாட்டுக்கு அனுப்பியது யாா் என்று பிரதமா் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியிருந்தாா்.