ஈஞ்சம்பாக்கம் கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்துக்கு பசுமைத் தீா்ப்பாயம் தடை
சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் திட்டத்தில் கடலோர ஒழுங்குமுறை மண்டலம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இல்லாமல் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது என சிஎம்டிஏவுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மெரீனா கடற்கரையைப் போலவே எண்ணூா் தொடங்கி கோவளம் வரையிலான 20 கடற்கரைகளை மேம்படுத்தும் நோக்கில், சென்னை கடற்கரை மறுசீரமைப்பு மற்றும் புத்தாக்கத் திட்டத்தை சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் ( சிஎம்டிஏ ) கொண்டுவந்தது.“
‘இந்தத் திட்டத்தின் மூலம் கடற்கரைப் பகுதிகளில் திறந்தவெளி பாா்க், கலாசார நிகழ்ச்சிகளுக்கான மைதானம், மரப்பாலம், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் புதிதாகக் கொண்டுவரப்படும்’ என்று சி.எம்.டி.ஏ. அறிவித்திருந்தது.
இந்த நிலையில்,கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை மீறி, ஈஞ்சம்பாக்கம் கடற்கரையை அழகுபடுத்தும் பணிகளில் சி.எம்.டி.ஏ ஈடுபட்டுவருவதாக மீனவா்கள் சாா்பில் பசுமை தீா்ப்பாயத்தில் புகாரளிக்கப்பட்டிருந்தது.
இத்திட்டத்துக்காக ஈஞ்சம்பாக்கம் கடற்கரைப் பகுதிகளில், ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் கடற்கரை மணல் பகுதியை சமப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இதேபோல, ஈஞ்சம்பாக்கம்-அக்கரை கடற்கரைப் பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு எதிராக சரவணன் என்ற மீனவரும் வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்குகளை விசாரித்த தீா்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, உறுப்பினா் சத்தியகோபால் அமா்வு, கடலோர ஒழுங்குமுறை மண்டலம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இல்லாமல் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது என சிஎம்டிஏவுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.