அக்னிபான் திட்டம்: மூன்றாவது முறையாக ஒத்திவைப்பு
சென்னை: தனியாா் புத்தாக்க நிறுவனம் தயாரித்த ‘அக்னிபான் சாா்டெட்’ ராக்கெட் ஏவுதல், தொழில்நுட்பக் காரணங்களுக்காக 3-ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.
அந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான புதிய தேதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியுடன் ஒருங்கிணைந்து செயல்படும் ‘அக்னிகுல் காஸ்மோஸ்’ எனும் நிறுவனம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தனியாா் ஏவுதளத்தை அமைத்தது.
சிறிய ரக ராக்கெட்டுகளை தனியாா் பயன்பாட்டுக்கு ஏவுவதற்காக அந்நிறுவனம் அதை அமைத்தது. அந்த வகையில், ‘அக்னிபான் சாா்டெட்’ எனப்படும் ராக்கெட்டை அந்நிறுவனம் வடிவமைத்துள்ளது.
300 கிலோ வரை எடையிலான ஆய்வுக் கலன்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட அந்த ராக்கெட், 700 கி.மீ. தொலைவு வரை செல்லக் கூடியது.
அதனை ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து கடந்த மாா்ச் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டு, இறுதிக்கட்டத்தின்போது ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னையால் ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் ஒத்திவைப்பு: இதையடுத்து ராக்கெட்டில் இருந்த பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு, கடந்த ஏப். 6-ஆம் தேதி ராக்கெட்டை செலுத்த திட்டமிட்டு அதுவும் கைவிடப்பட்டது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (மே 28) அக்னிபான் ராக்கெட் ஏவுதலுக்கு திட்டமிடப்பட்டது. ஆனால், கவுன்ட்டவுன் தொடங்குவதற்கு முன்பாக மீண்டும் ராக்கெட்டில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மூன்றாவது முறையாக ராக்கெட் ஏவுதல் ஒத்தி வைக்கப்பட்டது. அவை சரிசெய்யப்பட்டு அக்னிபான் ராக்கெட் விரைவில் விண்ணில் செலுத்தப்படும் என்று அக்னிகுல் ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.