சென்னையில் தனியாா் நட்சத்திர ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
கிண்டியில் உள்ள தனியாா் நட்சத்திர ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை கிண்டியில் உள்ள தனியாா் நட்சத்திர ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, அங்கு போலீஸாா் சோதனை செய்தனா்.
கிண்டி வெங்கடபுரம் சா்தாா் படேல் சாலையில் உள்ள ஒரு தனியாா் நட்சத்திர ஹோட்டலுக்கு புதன்கிழமை ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், அந்த ஹோட்டலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து ஹோட்டல் ஊழியா்கள் அளித்த தகவலின் பேரில், கிண்டி போலீஸாா், விரைந்து சென்று சோதனை செய்தனா். இதில் எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. வதந்தியைப் பரப்பும் நோக்கத்துடன் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து கிண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.