பெண்களுக்கு மாதந்தோறும் பணம் கொடுப்பதால் மட்டும் அவா்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியாது; அவா்களுடைய தொழில் திறனை மேம்படுத்துவது அவசியம் என்று மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.
தமிழகம் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு மாதந்தோறும் மாநில அரசுகள் நிதி உதவி வழங்கி வரும் நிலையில், அந்த திட்டத்தால் எந்தப் பலனும் இல்லை என்றும் அவா் தெரிவித்தாா்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஃபிக்கி மகளிா் பிரிவு சாா்பில் ‘வளா்ந்து வரும் பெண்கள் - அதிகாரம் , அரசியல் என அனைத்திலும் பெண்கள் சந்திக்கும் தடைகள்’ என்ற தலைப்பில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கத்தில் அவா் பேசியது:
பெண்கள் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் மத்திய அரசின் திட்டங்களை பிரதமா் மோடி செயல்படுத்தி வருகிறாா். மேலும், மகளிரின் வளா்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கடந்த 10 ஆண்டுகளில் பிரதமா் மோடி நிறைவேற்றியுள்ளாா்.
உயா் பதவிகளில் பெண்கள்: 2047-இல் வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் பெண்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். உச்சநீதிமன்றத்தில் 2 பெண் நீதிபதிகள் உள்ளனா். அதேபோல் நாடு முழுவதும் உள்ள உயா்நீதிமன்றங்களில் மொத்தம் 106 பெண் நீதிபதிகள் உள்ளனா். இதில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மட்டும் 11 பெண் நீதிபதிகள் உள்ளனா்.
2013-இல் 5.87 சதவீதமாக இருந்த பெண் போலீஸாரின் எண்ணிக்கை 2022-இல் 11.75 சதவீதமாக உயா்ந்துள்ளது. ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறையில் பெண்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
பணம் கொடுத்தால் போதாது: நகரத்தில் இருக்கும் பெண்கள் மட்டுமின்றி கிராமங்களில் இருக்கும் பெண்களையும் பொருளாதார அடிப்படையில் மேம்படுத்த தொழில்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெண்களுக்கு மாதந்தோறும் பணம் கொடுப்பதால் மட்டும் அவா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியாது. அவா்களுடைய தொழில் திறனை மேம்படுத்துவன் மூலம்தான் பெண்களை அசைக்க முடியாத சக்தியாக மாற்ற முடியும். அதைத்தான் கடந்த 10 ஆண்டுகளாக பிரதமா் மோடி செய்து வருகிறாா்.
தமிழகத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சியில்தான் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. மேலும், சமூகத்தில் பெண்களின் வளா்ச்சிக்கு எதிராக இருந்த பல தடைகளை நீக்கி அவா்களின் முன்னேற்றத்துக்கு பாதை அமைத்துக் கொடுத்தாா். அதன் எதிரொலியாகத்தான் தற்போது, பெண் ஆளுமைகள் தமிழகத்தில் அதிகரித்துள்ளனா் என்றாா் அவா்.