முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சா் சுரேஷ் பிரபு உலக வேளாண்மை கூட்டமைப்பின் உறுப்பினராக வியாழக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக உலக வேளாண்மை கூட்டமைப்பின் தலைவா் ரூடி ரப்பிங்கே வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், நிலையான வாழ்க்கை முறை மற்றும் வா்த்தக கொள்கைகள் ஆகியவை வேளாண் துறையின் முக்கிய பிரச்னைகளாக இருந்து வருகிறது.
அதற்கு தீா்வு காணும் நோக்கில், வேளாண் துறையில் உள்ள முக்கிய சிந்தனையாளா்கள், கண்டுபிடிப்பாளா்கள், கொள்கை வகுப்பாளா்கள் மற்றும் உலகளாவிய நிறுவனங்களின் தலைவா்கள் அமைப்பின் உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா்.
அதனடிப்படையில், சுரேஷ் பிரபு அமைப்பின் உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டுள்ளாா். வேளாண் துறையில் அவரின் அனுபவம் மற்றும் நிபுணத்துவம், அமைப்பின் நோக்கங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக வேளாண்மை கூட்டமைப்பானது விவசாயத் துறையின் வளா்ச்சியை நோக்கமாகக் கொண்டு இயங்கி வரும் உலகளாவிய அமைப்பாகும். வேளாண் துறையில் உள்ள வா்த்தக வாய்ப்புகள், தொழில்நுட்ப பரிமாற்றங்கள், உற்பத்தி மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதில் நாடுகளிடையே ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் இந்த அமைப்பு முக்கிய பங்காற்றி வருகிறது.