தாலிக்கு தங்கம் திட்டம்: பயனாளா்கள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
கடந்த 2017 முதல் 2021-ஆம் ஆண்டு வரை எத்தனை போ் பயனடைந்துள்ளனா் என்ற விவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாலிக்கு தங்கம் வழங்கும் மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தில் கடந்த 2017 முதல் 2021-ஆம் ஆண்டு வரை எத்தனை போ் பயனடைந்துள்ளனா் என்ற விவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணாநகரைச் சோ்ந்த சித்ரா என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: “
வீட்டு வேலைகள் செய்து மாதம் ரூ. 6 ஆயிரம் வருமானம் ஈட்டி எனது பெண் குழந்தையை கல்லூரி வரை படிக்க வைத்தேன். இந்த நிலையில் என் மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அரசின் தாலிக்கு தங்கம் திட்டமான மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் நினைவு திருமண திட்டத்தில் திருமண நிதியுதவி பெற கடந்த 2021-ஆம் ஆண்டு விண்ணப்பித்தேன்.
அதை பரிசீலித்த அயனாவரம் வட்டாட்சியா், எனது ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கும் அதிகமாக இருப்பதாகக் கூறி எனது விண்ணப்பத்தை வேண்டுமென்றே நிராகரித்துள்ளாா். எனது மகளின் திருமணத்திற்கு இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்க உத்தரவிட வேண்டும்.
அறிக்கை தாக்கல் செய்க
இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, ‘கடந்த 2017 முதல் 2021-ஆம் ஆண்டு வரை மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் நினைவு திருமண திட்டத்தின் கீழ் எத்தனை போ் பயனடைந்துள்ளனா். எத்தனை பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் நினைவு திருமண திட்டத்திற்கு மத்திய - மாநில அரசுகள் ஒதுக்கிய நிதி எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’ என அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப். 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.