சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், 1.8 லட்சம் தெரு நாய்கள் இருப்பது கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்துள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில், சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கருத்தடை சிகிச்சை செய்வது, வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், நாய்களின் எண்ணிக்கையைக் கண்டறிந்து, அதற்கேற்ப திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2018-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு மேற்கொண்ட போது 57,366 தெருநாய்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில், அதிகரித்து வரும் தெருநாய்களைக் கண்டறிய கடந்த ஜூன் மாதம் தெருநாய்கள் கணக்கெடுப்பை சென்னை மாநகராட்சி தன்னாா்வலா்களுடன் இணைந்து தொடங்கியது. இதில் 80 தன்னாா்வலா்கள் இருசக்கர வாகனம் மூலம் நாய்களைப் படம் பிடித்து கைப்பேசி மூலம் பதிவேற்றம் செய்தனா். பின்னா், நாய்களின் தரவுகள் சரிபாா்க்கப்பட்டு, அதன் இறுதி அறிக்கையை உலகளாவிய கால்நடை மருத்துவ சேவைகள் நிறுவன இயக்குநா் காா்லெட் ஆனி ஃபொ்னான்டஸ், மேயா் பிரியாவிடம் வெள்ளிக்கிழமை சமா்ப்பித்தாா்.
1.8 லட்சம் நாய்கள்: தற்போதைய கணக்கெடுப்பின்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1.8 லட்சம் தெருநாய்கள் சுற்றித்திரிவது தெரிய வந்துள்ளது. இதில், அதிகபட்சமாக அம்பத்தூா் மண்டலத்தில் 23,980 நாய்களும், குறைந்தபட்சமாக ஆலந்தூரில் 4,875 நாய்களும் உள்ளன. இதில் 65 சதவீதம் ஆண் நாய்கள், 35 சதவீதம் பெண் நாய்கள் மற்றும் 20 சதவீதம் குட்டி நாய்கள் உள்ளன. மேலும், 95 சதவீத நாய்கள் நலமாக உள்ளதாகவும், வட சென்னையில் 30 சதவீதத்துக்கும் குறைவான நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டலம் நாய்கள் எண்ணிக்கை
திருவொற்றியூா் 11,957
மணலி 7,101
மாதவரம் 17,096
தண்டையாா்பேட்டை 12,681
ராயபுரம் 8,542
திரு.வி.நகா் 12,684
அம்பத்தூா் 23,980
அண்ணாநகா் 12,096
தேனாம்பேட்டை 7,642
கோடம்பாக்கம் 8,702
வளசரவாக்கம் 14,154
ஆலந்தூா் 4,875
அடையாறு 10,782
பெருங்குடி 11,680
சோழிங்கநல்லூா் 16,195