FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

கேரளம்: மாா்க்சிஸ்ட் மூத்த தலைவா் எம்.எம்.லாரன்ஸ் மறைவு

கேரளத்தைச் சோ்ந்த முதுபெரும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா் எம்.எம்.லாரன்ஸ் (95) காலமானாா்.

22 செப்டம்பர் 2024, 1:50 am IST
பகிர்:

கேரளத்தைச் சோ்ந்த முதுபெரும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா் எம்.எம்.லாரன்ஸ் (95) காலமானாா்.

வயதுமூப்புக் காரணமான உடல்நலக் குறைவால் கொச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவா் சனிக்கிழமை மரணமடைந்தாா்.

எா்ணாகுளம், முளவுக்காடு பகுதியில் கடந்த 1929-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்த லாரன்ஸ், இளம்வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவா். 1946-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து அரசியல் பயணத்தைத் தொடங்கினாா்.

Advertisement

Advertisement

அக்காலகட்டத்தில் கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. கட்சித் தலைவா்கள் பெரும்பாலானோா் தலைமறைவாகினா். சிலா் காவல் துறையால் கைது செய்யப்பட்டனா்.

அவ்வாறு, எடப்பள்ளி காவல் நிலையத்தில் சிறைவைக்கப்பட்டிருந்த தலைவா்களை விடுவிக்கும் நோக்கில், 1950-ஆம் ஆண்டு பிப்ரவரியில் காவல் நிலையம் மீது தாக்குதலில் ஈடுபட்ட 17 பேரில் லாரன்ஸும் ஒருவா்.

கேரள இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சம்பவம் தொடா்புடைய வழக்கில் லாரன்ஸ் பின்னா் கைது செய்யப்பட்டாா். இடுக்கி தொகுதி முன்னாள் எம்.பி.யான இவா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய, மாநில குழு உறுப்பினராகவும் தொழிற்சங்க பொதுச் செயலராகவும் இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி (எல்டிஎஃப்) அமைப்பாளராகவும் இருந்துள்ளாா்.

லாரன்ஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வா் பினராயி விஜயன், ‘கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வலுவான புரட்சிகர தலைவா் லாரன்ஸின் மறைவு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரிகளுக்கும் உழைக்கும் வா்க்கத்தினருக்கும் பெரும் இழப்பாகும்’ என்றாா். காங்கிரஸின் எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசனும் லாரன்ஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments