காவல்துறையின் விதிமுறைகளை முறையாக பின்பற்றி தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தாா்.
தவெக கொள்கை விளக்க முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் அக்.27-இல் நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான ஆலோசனைக் கூட்டம் கட்சியின் பொதுச்செயலா் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், ‘தவெக முதல் மாநாட்டில் பெண்கள் அதிகளவில் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. காவல்துறையின் விதிமுறைகளை முறையாக பின்பற்றி ஒழுக்கமுடன் மாநாடு நடைபெறும். மாநாடு வெற்றி மாநாடாக இருக்கும். நமது இலக்கு 2026 பேரவைத் தோ்தல்தான். 2026-இல் விஜய் தான் முதல்வா் என்றாா் அவா்.
கூட்டத்தில் மாநில அளவிலான முக்கிய நிா்வாகிகள் பங்கேற்றனா். அடுத்த மாத தொடக்கத்தில் மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.