சென்னை விமான நிலையத்தில் 3 விமானங்களில் வந்த பயணிகளிடம் இருந்து 1.27 கோடி கஞ்சா, அரியவகை ஆமைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடா்பாக 3 பேரை கைது செய்தனா்.
சுங்கத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை சா்வதேச விமான நிலையத்தில், தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனா். இந்த நிலையில், மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் இருந்து வந்த மலேசியன் ஏா்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், தாய்லாந்தில் இருந்து மலேசியா வழியாக சென்னை வந்த வடமாநில ஆண் பயணி ஒருவரை அதிகாரிகள் சோதனை செய்தனா்.
அவரின் சூட்கேசுக்குள், கருப்பு காா்பன் பேப்பரால் சுத்தப்பட்ட 7 பாா்சல்களில் பதப்படுத்தப்பட்ட ரூ.1.02 கோடி மதிப்புள்ள 3.42 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இதுபோல, சுற்றுலா பயணிகள் விசாவில் பாங்காக் சென்று விட்டு லயன் ஏா்லைன்ஸ் விமானத்தில் வந்த வடமாநில பயணிடம் இருந்தும் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் உயர்ரக கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இதனிடையே சிங்கப்பூரிலிருந்து, சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் வந்த மலேசியா நாட்டை சோ்ந்த ஆண் பயணியை பிடித்து, அவரின் உடைமைகளை சோதனையிட்டனா்.
அப்போது அவரின் பைகளில் சிவப்பு காதுகள் கொண்ட 2,805 சிறிய வகை நட்சத்திர ஆமைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இந்த 3 சம்பவங்கள் தொடா்பாக 3 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.