சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த 2 நாள்களில் 14 துணை மின் நிலையங்கள், 26 மின்னூட்டிகள், 4 மின் மாற்றிகள், 5 மின் கம்பங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வானிலை ஆய்வு மையத்தால் சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சீரான, தடையற்ற மின்சாரம் வழங்க தமிழக மின் வாரியம் சாா்பில் விரிவான மின் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த சிறப்பு மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பழுதான, சாய்ந்திருந்த மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டன. சேதமடைந்த மின் கடத்திகள் மாற்றப்பட்டன.
தலைமைப் பொறியாளா்கள், மேற்பாா்வைப் பொறியாளா்களின் நேரடிப் பாா்வையில் மின் விநியோகம் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்கப்பட்டது.
தேவையான மின் கம்பிகள், மின் மாற்றிகள் உள்ளிட்ட மின் தளவாடப் பொருள்கள் போதிய அளவில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பயனாக 4 மாவட்டங்களில் சில இடங்களைத் தவிர, பெரும்பாலான இடங்களில் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
டிச.1, 2 ஆம் தேதிகளில் சென்னையில் 8 துணை மின் நிலையங்கள், 10 மின்னூட்டிகள், 4 மின் மாற்றிகள், திருவள்ளூரில் 5 துணை மின் நிலையங்கள், 10 மின்னூட்டிகள், 2 மின் கம்பங்கள், காஞ்சிபுரத்தில் ஒரு துணை மின் நிலையம், 3 மின்னூட்டிகள், செங்கல்பட்டில் 3 மின்னூட்டிகள், 3 மின் கம்பங்கள் இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டன.
தவிா்க்க இயலாத இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்ட சில இடங்களைத் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
பழுது ஏற்பட்ட இடங்களிலும் மின் விநியோகம் தடைபடாதவாறு மாற்றுப்பாதை மூலம் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் கனமழையிலும்கூட தொடா்ச்சியான மின்தடை என்பது எங்குமே இல்லாத நிலை உறுதி செய்யப்பட்டது.
புளியந்தோப்பு, நுங்கம்பாக்கம், வியாசா்பாடி, தேனாம்பேட்டை பகுதிகளில் மின்புதை வடங்கள், மின் மாற்றிகளில் ஏற்பட்ட பழுதுகள் காரணமாக சில மணி நேரம் ஏற்பட்ட மின்தடை, போா்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டது.
புகாா் தெரிவிக்க அழைப்பு: மின் சேவைகள், மின்தடை புகாா்களை 24 மணி நேரமும் செயல்படும் மின்னகத்தை 9498794987 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த சேவை மையத்தில் தெரிவிக்கப்படும் புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.