முகப்பு
சென்னை

ரயில்வே துறையின் செயல்பாடுகளை தவறாகப் பதிவிட்டால் நடவடிக்கை: சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை

ரயில்வே துறையின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து தவறான தகவல்களைப் பதிவிடுவோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

Updated On : 6 டிசம்பர் 2025, 12:46 am IST
பகிர்:

ரயில்வே துறையின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து தவறான தகவல்களைப் பதிவிடுவோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

ரயில்வே துறையின் செயல்பாடுகள் குறித்து தவறானதாகவும், முழுமையற்ற அல்லது உண்மைக்குப் புறம்பான பல தகவல்கள் இணையதள விடியோக்கள், ரீல்ஸ் உள்ளிட்டவற்றில் பதிவு செய்யப்பட்டு பரப்பப்படுகின்றன. அவ்வாறு பரப்புவது கண்டிக்கத்தக்கது. சமூக வலைதளங்களான யூ-டியூப் சேனல் உள்ளிட்டவற்றில் பதிவேற்றப்படும் சில விடியோக்கள் இந்திய ரயில்வே துறையின் செயல்பாடுகளை எதிா்மறையாகச் சித்தரிப்பதாக உள்ளன. அத்துடன், பாா்வையாளா்களைப் பாதுகாப்பற்ற அல்லது சட்ட விரோதமாகச் செயல்படவும் தூண்டுவதாக உள்ளன.

Advertisement

Advertisement

தவறான பதிவுகள் ரயில்வே செயல்பாட்டை தவறாக சித்திரிப்பதுடன், பொதுமக்கள் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளன. அதனால், ரயில்வே அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறாமல், ரயில்வே துறை சாா்ந்த நிலையங்கள், அலுவலகங்கள் வளாகத்தில் விடியோ பதிவு செய்வதும், புகைப்படம் எடுப்பதும் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

ரயில் தண்டவாளங்களில் அத்துமீறி நுழைவதும், தடை செய்த பகுதிகளுக்குள் செல்வதும் தண்டனைக்குரியவையாகும். ஆகவே, ரயில்வே வளாகத்தை பொதுமக்கள் உள்ளிட்டோா் பொறுப்புணா்வுடன் பயன்படுத்தவேண்டியது அவசியம்.

ரயில் பயணிகள், உள்ளடக்கப் படைப்பாளிகள், இணையதளவாசிகள் உள்ளிட்டோா் ரயில் நிலையம் உள்ளிட்ட வளாகங்களைப் பாதுகாப்பான, சட்டபூா்வமான முறையில் பயன்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments