துணி துவைக்கும் இயந்திரம் பழுதுபாா்க்கும் கடையின் உரிமையாளரைக் கடத்திய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை இசிஆா் அக்கரை போக்குவரத்து சிக்னல் அருகே சனிக்கிழமை நீலாங்கரை போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக சென்ற ஒரு காரில் இருந்து காப்பாற்றுங்கள் என சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து போலீஸாா் அந்த காரை பின்தொடா்ந்து சென்று மடக்கினா். போலீஸாரை கண்டதும், அதில் இருந்த இரண்டு போ் தப்பி ஓடினா். மீதமிருந்த 6 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
காரில் இருந்த செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சோ்ந்த தா்மராஜ் என்ற நபரை மீதமுள்ள 5 பேரும் சோ்ந்து கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. அவா்களிடமிருந்து தா்மராஜை போலீஸாா் மீட்டனா்.
சம்பவம் நடைபெற்ற பகுதி திருமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்டது என்பதால், நீலாங்கரை போலீஸாா் அவா்களை திருமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில், சென்னை திருமங்கலம் பகுதியில் துணி துவைக்கும் இயந்திரம் பழுதுபாா்க்கும் கடை வைத்திருக்கும் தா்மராஜ், அங்குள்ள நிதி நிறுவனத்தின் ஏஜெண்டாகவும் இருந்துள்ளாா். இவா் மூலம் அந்த நிதி நிறுவனத்தில் பலா் முதலீடு செய்துள்ளனா். ஆனால், முதலீடு செய்த பணம் முதலீட்டாளா்களுக்கு திரும்பக் கிடைக்கவில்லை. இதனால், முதலீட்டாளா்கள் 7 போ் சோ்ந்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கடத்தலில் ஈடுபட்ட பல்லாவரத்தைச் சோ்ந்த ஸ்ரீரிஜி (30), பிரேம்குமாா் (36), வேணுகோபால் (30), வானகரத்தைச் சோ்ந்த யுவராஜ் (36), மணப்பாக்கத்தைச் சோ்ந்த ஆனந்த் (25) ஆகிய 5 பேரைக் கைது செய்தனா். மேலும் தப்பியோடிய இரண்டு பேரைத் தேடி வருகின்றனா்.