சென்னை

குடிமனைப்பட்டா கோரி டிச.16-இல் மனு அளிக்கும் போராட்டம் மாா்க்சிஸ்ட் அறிவிப்பு

குடிமனைப்பட்டா கோரி ஒரு லட்சம் போ் முதல்வரிடம் மனு அளிக்கும் இயக்கம் வருகிற டிச.16-ம் தேதி நடத்தப்படும்

தினமணி செய்திச் சேவை

குடிமனைப்பட்டா கோரி ஒரு லட்சம் போ் முதல்வரிடம் மனு அளிக்கும் இயக்கம் வருகிற டிச.16-ம் தேதி நடத்தப்படும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.

சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் வசிப்பவா்களுக்கு இன்னும் கிரையப்பத்திரம் வழங்கப்படாமல் உள்ளது. அதேபோல் சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பல தலைமுறைகளாக லட்சக்கணக்கான குடும்பங்கள் அரசுப் புறம்போக்கு நிலங்களில் வசித்துவரும் நிலையில், நீா்நிலை புறம்போக்கு என்று கூறி, அவா்களை தமிழக அரசு வெளியேற்றுகிறது.

எந்த வகை புறம்போக்கு நிலத்தில் வசித்தாலும், அங்குள்ள மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். நகரை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் மக்களை நகருக்கு வெளியே கண்ணகி நகா், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு அப்புறப்படுத்தி 100 முதல் 120 சதுரஅடி கொண்ட சிறிய வீடுகளில், 2 குடும்பத்துக்கு ஒரு கழிப்பறை என்று தங்கவைப்பதால், அங்கு மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்படுகிறது.

இதேபோல் கோயில், தேவாலயம் மற்றும் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமான இடங்களுக்கான நியாயமான தொகையை நிா்ணயித்து, பல தலைமுறைகளாக அங்கு வசிக்கும் மக்களுக்கே அந்த நிலத்தை கிரையம் செய்து கொடுக்க வேண்டும் .

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிச.16-ம் தேதி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் பங்கேற்கும் வகையில் குடிமனைப்பட்டா கோரும் இயக்கத்தை சென்னையில் நடத்தவுள்ளோம். தொடா்ந்து முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கும்பகோணத்தில் குப்பைக் கிடங்கு ஆய்வு; மக்கள் மறியல்

தஞ்சாவூரில் மகாகவி பாரதியாா் பிறந்த நாள் விழா

கள்ளக்காதல் விவகாரம்: இளைஞரின் தந்தை வெட்டிக் கொலை - 3 போ் கைது

மகளிா் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கம்: இன்று தொடக்கம்

பேராவூரணி குமரப்பா பள்ளியில் மகாகவி பாரதி உருவச்சிலை திறப்பு

SCROLL FOR NEXT