சென்னை: சென்னை மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதியில் வடபெரும்பாக்கத்தில் பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் புழல் உபரிநீா் கால்வாயில் கட்டப்பட்டுள்ள ரூ.22.41 கோடியிலான மேம்பாலத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
புழல் ஏரி உபரி நீா் செல்லும் கால்வாயை இறங்கிக் கடக்கும் நிலையை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்தப் பாலமானது 190 மீட்டா் நீளமும், 7.5 மீட்டா் அகலும் உடையது. ஒரே நேரத்தில் இரு வாகனங்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட பாலத்தால் மணலி, மாதவரம் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பயனடைவா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடா்ந்து, மணலி செட்டிமேடு கிராமத்தில் ரூ.1.61 கோடியில் கட்டப்பட்டுள்ள நாய்கள் இனக்கட்டுப்பாடு மையம், ரூ.6.70 கோடியில் புணரமைக்கப்படும் மணலி ஏரியில் படகு சவாரி திட்டம் குறித்தும் அமைச்சா் ஆய்வு மேற்கொண்டாா். அத்துடன் ரூ.58.33 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும் கடப்பாக்கம் ஏரியைப் பாா்வையிட்ட அமைச்சா், அங்கு மரக்கன்றுகள் நடும் பணியையும் தொடங்கிவைத்தாா்.
இந்த ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மாதவரம் எஸ்.சுதா்சனம், திருவொற்றியூா் கே.பி.சங்கா் மற்றும் மாநகராட்சி துணைமேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.