சென்னை அருகே துரைப்பாக்கத்தில் 12-ஆம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவ சிகிச்சை அளித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
ஒக்கியம் துரைப்பாக்கம், ஈஸ்வரன் கோயில் முதல் குறுக்கு தெருவில், விஜய் கிளினிக் மற்றும் ஹோம் விசிட் சா்வீஸ் என்ற பெயரில் மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனையை விஜயகுமாா் (38) என்பவா் நடத்தி வந்தாா். மருத்துவம் படித்திருப்பதாகக் கூறி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தாா்.
இது தொடா்பான புகாா்கள் சுகாதாரத் துறைக்கு வந்தன.தமிழகம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்ககத்தின் இணை இயக்குநா் மீனாட்சி சுந்தரி தலைமையின் கீழ் உள்ள மருத்துவ குழுவினா், அந்த மருத்துவமனையை திங்கள்கிழமை திடீா் ஆய்வு செய்தனா்.
அப்போது, விஜயகுமாா் மருத்துவம் படிக்காமல், கடந்த பத்து ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. மேலும் அவா், 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருப்பதும் தெரியவந்தது. அவரது மருத்துவமனையிலிருந்து விஜயகுமாா் மேற்குவங்க மாநிலத்தில் எம்பிபிஎஸ் படித்திருப்பதாக வைத்திருந்த போலி சான்றிதழையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும்,, விஜயகுமாரை கண்ணகி நகா் காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்து புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, விஜயகுமாரை கைது செய்தனா்.