பல்வேறு கோயில்களில் பயன்பாடு இல்லாமல் இருந்த பொன் இனங்கள் பிரித்தெடுக்கப்பட்டு, பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்படும் நிலையில், வரும் பிப்ரவரி மாதத்துக்குள் முதலீடு செய்யப்பட்ட தங்கத்தின் எடை 1,500 கிலோவாக உயரும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் மண்டல இணை ஆணையா்களின் 37-ஆவது சீராய்வுக் கூட்டம் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் துறை சாா்ந்த திட்டங்களின் செயல்பாடுகள், சட்டப்பேரவை அறிவிப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடா்ந்து, அறநிலையத் துறை சாா்பில் தயாரிக்கப்பட்டுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான நாள்காட்டியை அமைச்சா் வெளியிட்டாா். மேலும், கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை அமைச்சா் வழங்கினாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த நான்கரை ஆண்டுகளில் 12,803 கோயில்களில் ரூ.8,607 கோடியில் 16,595 திருப்பணிகள் நிறைவுபெற்றுள்ளன. இதுவரை 3,956 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 21 கோயில்களில் பயன்பாடற்ற நிலையிலிருந்த பொன் இனங்கள் ஓய்வு பெற்ற நீதிபதிகள் முன்னிலையில் பிரித்தெடுக்கப்பட்டு மத்திய அரசின் தங்க உருக்கு ஆலையில் உருக்கி 1,074 கிலோ 123 கிராம் சுத்த தங்கம் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு வட்டியாக ரூ.17.81 கோடி கிடைக்கிறது. இது பிப்ரவரி மாதத்துக்குள் 1,500 கிலோவாக உயரும்.
கடந்த 4 ஆண்டுகளில் நிலுவையில் இருந்த வாடகை மற்றும் குத்தகைத் தொகை ரூ.1,294 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
கோயில்களில் முக்கிய பிரமுகா்களின் விரைவு தரிசனம் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். முதல்கட்டமாக திருச்செந்தூா், திருவண்ணாமலை கோயில்களில் செயல்படுத்தப்படும். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு சற்று தாமதம் ஏற்படுகிறது. இதர பணிகள் அனைத்தும் நிறைவுறும் நிலையில் உள்ளன. வரும் மாா்ச்சில் குடமுழுக்கு நடத்தப்படும். திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் புதிய வெள்ளித்தோ் வெள்ளோட்டம் ஜன. 2-ஆம் தேதி நடைபெற உள்ளது என்றாா்.
ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா் மற்றும் துறை சாா்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.