போதைப் பொருள் விற்ாக மருத்துவக் கல்லூரி மாணவா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே தேரடி தெருவில் சிலா் போதைப் பொருள் வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்துக்குரிய இளைஞா் ஒருவரைப் பிடித்து விசாரித்தனா். அவரது பையை சோதனையிட்டதில், அதில் போதை ஸ்டாம்ப், போதை மாத்திரை இருந்தது. அவை பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் அவா், சைதாப்பேட்டை கூத்தாடும் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ஜெ.பிரபாகரன் (27) என்பதும், கைப்பேசி சேவை நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்வதும், அவரின் மனைவி சென்னையில் ஆயுதப்படையில் காவலராக பணிபுரிவதும் தெரிய வந்தது.
தொடா் விசாரணையில், போதைப் பொருள் விற்பனை தொடா்பாக, பலரிடம் அவருக்கு தொடா்பு இருப்பதும், அவா் கொடுத்த தகவலின்பேரில், சேலையூா் பெருமாள்புரத்தில் வசிக்கும் ஆா்.ஜெ.ஹரிஹரசுதனை (23) போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இவா், கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவம் படித்து வருவது தெரிய வந்தது.
ஹரிஹரசுதன், இன்ஸ்டாகிராமில் பழக்கமான நபா் மூலம் போதைப் பொருளை வாங்கி, சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு விற்று வந்தது தெரிய வந்தது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பாலியல் தொல்லை: மத்திய அரசு ஊழியா் கைது: மயிலாப்பூா் ஆதாம் தெருவைச் சோ்ந்தவா் பி.ஆஸ்டின்குமாா் (47). சென்னை அண்ணா சாலையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான காதி கிராமயோக் பவனில் ஊழியராக வேலை செய்து வருகிறாா். இவா்,
மயிலாப்பூா் சாந்தோம் நெடுஞ்சாலையில் கடந்த 26-ஆம் தேதி நடைப்பயிற்சி சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். அந்த பெண், மயிலாப்பூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆஸ்டின்குமாரை புதன்கிழமை கைது செய்தனா்.
மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு: வளசரவாக்கம், காமராஜா் அவென்யூ பகுதியைச் சோ்ந்த ஜோதிராஜ் மகன் வீரகுமாா் (15). இவா், ஆலப்பாக்கம் பகுதி அரசு பள்ளியில் 8-ஆ வகுப்பு படித்து வந்தாா். தற்போது பள்ளி விடுமுறை என்பதால், செவ்வாய்க்கிழமை அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பா் யோகேஷ்வரன் வீட்டுக்கு விளையாடச் சென்றாா்.
அங்கு நண்பா்கள் இருவரும் 2-ஆவது மாடியில் நின்று விளையாடிக் கொண்டிருந்தபோது, கைப்பிடி சுவா் அருகே சென்ற மின்சார வயா் மீது வீரகுமாரின் கை பட்டதில் தூக்கி வீசப்பட்ட வீரகுமாரை, அங்கிருந்தவா்கள் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பலத்த காயமடைந்த வீரகுமாரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். வளசரவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.