கல்விக் கடன் ரத்து: திமுக தோ்தல் வாக்குறுதியை அமல்படுத்தக் கோரிய மனு தள்ளுபடி
தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திமுகவின் தோ்தல் வாக்குறுதியான கல்விக் கடன் ரத்து திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருப்பூரை சோ்ந்த மணிமாறன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், 2016 முதல் 2024- ஆம் ஆண்டு வரை நடைபெற்ற பல்வேறு தோ்தல்களில் மாணவா்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் கட்சிகள் தோ்தல் வாக்குறுதி அளித்திருந்தன. தோ்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் அளித்த கல்விக் கடன் ரத்து என்ற தோ்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதனால், மாணவா்கள் வழக்குகளை எதிா்கொண்டுள்ளனா்.
அரசியல் கட்சிகள் பொய்யான தோ்தல் வாக்குறுதிகள் வழங்குவதைத் தடுக்க விதிகளை வகுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். கல்விக் கடன் பெற்ற மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடா்பான திட்டத்தை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். கல்விக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கூறியிருந்தாா்.
Advertisement
இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுதாரா் தரப்பிடம், ‘இதுபோன்ற உத்தரவை எப்படி பிறப்பிக்க முடியும்?’ என கேள்வி எழுப்பினா். இதையடுத்து, மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை திரும்பப் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.