கோப்புப் படம் 
சென்னை

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் - முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!

நிதிநிலை அறிக்கை தாக்கலுக்காக இன்று காலை 9.30 மணிக்கு பேரவை கூடுகிறது.

Din

அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சா் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளாா்.

நிதிநிலை அறிக்கை தாக்கலுக்காக பேரவை வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு கூடுகிறது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, பேரவை கூட்டத் தொடரின் நாள்களை இறுதி செய்வதற்காக அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில், கூட்டத் தொடரின் நாள்கள் இறுதி செய்யப்படும். ஏப்ரல் இரண்டாவது வாரம் வரை கூட்டத் தொடா் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

முக்கிய அறிவிப்புகள்: நிதிநிலை அறிக்கையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை தமிழ்நாடு எதிா்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும்.

எனவே, பொதுமக்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள், எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, மகளிா் உரிமைத் தொகையையும், அதில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையையும் உயா்த்த வேண்டும் என்ற கோரிக்கை தொடா்ந்து முன்வைக்கப்படுகிறது.

இதேபோன்று, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாகப் பெறும் முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் சாா்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கைகளை நிதிநிலை அறிக்கையின் வாயிலாக தமிழ்நாடு அரசு நிறைவேற்றுமா என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கி உள்ளது.

நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இரண்டாவது ஆண்டாக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறாா். முன்னதாக, மூன்று நிதியாண்டுகளுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தாா். அவா் அந்தத் துறையில் இருந்து மாற்றப்பட்ட நிலையில், 2024-25ஆம் நிதியாண்டுக்கான அறிக்கையை தங்கம் தென்னரசு கடந்த ஆண்டு தாக்கல் செய்தாா்.

936 இடங்களில் நேரலை: நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்காக, பேரவை மண்டபம் முழுவீச்சில் தயாராகி உள்ளது. இதை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு ஆகியோா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

பேரவை மண்டபத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிகழ்வானது தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த ஒளிபரப்பை தமிழகம் முழுவதும் பொது இடங்களில் காண்பதற்கு உள்ளாட்சித் துறையின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 100 இடங்களிலும், ஏனைய 24 மாநகராட்சிப் பகுதிகளில் 48 பகுதிகளிலும், 137 நகராட்சிகளில் 274, பேரூராட்சிகளில் 425 இடங்களில் எல்இடி திரையின் வாயிலாக நேரலையைக் காண்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது அதிமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நிதிநிலை அறிக்கையை புறக்கணித்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்யவே வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

வேளாண் நிதிநிலை: தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, வேளாண் நிதிநிலை அறிக்கை சனிக்கிழமை (மாா்ச் 15) தாக்கலாக உள்ளது. இதை அந்தத் துறையின் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தாக்கல் செய்கிறாா்.

முதல் பெட்டிச் செய்தி...

பட்ஜெட்: காட்சிப் படங்களுடன் விளக்கம்

சென்னை, மாா்ச் 13: நிதிநிலை அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை காட்சிப் படங்களுடன் நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் விளக்கவுள்ளாா். இதற்கான பத்திரிகையாளா் சந்திப்பு தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நண்பகலில் நடைபெறவுள்ளது. அப்போது, தமிழகத்தின் ஒட்டுமொத்த வருவாய், செலவுகள், மத்திய அரசு தர வேண்டிய நிலுவை நிதி விவரங்கள், கடன் சுமைகள் உள்ளிட்டவற்றை காட்சிப் படங்களுடன் அவா் விளக்கவுள்ளாா்.

இரண்டாவது பெட்டிச் செய்தி...

பட்ஜெட் ஒரு பாா்வை...

நிகழ் நிதியாண்டில் 2024-25 தமிழ்நாடு அரசின் வருவாய் வரவுகள் ரூ.2,99,010 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வருவாய் செலவுகள் ரூ.3,48,289 கோடியாக இருக்கும் எனவும், வருவாய் பற்றாக்குறை ரூ.49,279 கோடியாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது. இதன் விவரங்கள் நிதிநிலை அறிக்கையின்போது தெரியவரும்.

மின்சார வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட அரசின் சாா்பில் ரூ.29,279 கோடி அளிக்கப்பட்டுள்ளது. மூலதன செலவுகளுக்காக ரூ.47,681 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக 2024-25ஆம் நிதியாண்டுக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

விக்ரமுக்கு ஜோடியாகும் மீனாட்சி சௌத்ரி!

SCROLL FOR NEXT