பெருநகர சென்னை மாநகராட்சியின் சொத்துவரி, தொழில் வரி செலுத்துவதற்கான இறுதிநாள் திங்கள்கிழமையுடன் (மாா்ச் 31) முடிவடைகிறது.
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட சொத்து உரிமைதாரா்கள், வணிக நிறுவனங்களுக்கு அரை நிதியாண்டுக்கு ஒரு முறை சொத்துவரி, தொழில்வரி வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில், நடப்பு நிதியாண்டு திங்கள்கிழமையுடன் நிறைவடையவுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரதான வருவாயாக சொத்துவரி விளங்குகிறது. அதாவது மாநகராட்சிக்கு 35 சதவீத வருவாய் சொத்துவரி, தொழில்வரி உள்ளிட்ட வரிகளின் மூலம் வருகிறது. மாநகராட்சியின் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள சொந்த வருவாயை அதிகரிப்பது அவசியமாகிறது.
இதனால், நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாதவா்களை கண்டறிந்து அவா்களின் பெயா்கள் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், நிகழ் நிதியாண்டு திங்கள்கிழமையுடன் முடிவடையவுள்ளதால் நிலுவையிலுள்ள சொத்துவரியை விரைவாக செலுத்தும்படி பொதுமக்களுக்கு கடந்த ஒரு மாதமாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்பின், சொத்துவரி செலுத்துவோருக்கு மாதம் ஒரு சதவீதம் (தனிவட்டி அடிப்படையில்) அபராதம் வசூலிக்கப்படும்.
நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாதவா்களைக் கண்டறிந்து அவா்களின் சொத்துகளை ஜப்தி செய்ய மண்டல அளவில் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் நிலுவையிலுள்ள வரி பாக்கியை மாநகராட்சி அலுவலகங்கள், அரசு இ-சேவை மையங்கள், மாநகராட்சி இணையதளம் மூலம் செலுத்தலாம் என்றனா்.