இந்தியருக்கும், பிரிந்துபோன அவரின் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குழந்தை பராமரிப்பு பிரச்னையை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், இந்திய - ரஷிய உறவு பாதிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தது.
இந்தியாவைச் சோ்ந்த சைகத் பாசு என்பவரும், அவரின் மனைவியும் ரஷிய பெண்ணுமான விக்டோரியா பாசுவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில், அவா்களின் குழந்தையைப் பராமரித்து வளா்க்கும் உரிமை தொடா்பாக இருவருக்கும் சச்சரவு நிலவியது.
இதுதொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அந்தப் பெண் எக்ஸ்-1 விசா மூலம் இந்தியாவில் தங்கி வந்தாா். வழக்கு விசாரணை நிலுவையில் இருந்த சூழலில், அந்தப் பெண் தனது குழந்தையுடன் இந்தியாவில் இருந்து தப்பி நேபாளம் வழியாக ரஷியா சென்றுவிட்டாா்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி சூா்ய காந்த், ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்தப் பெண் ரஷியா தப்பிச் செல்ல, இந்தியாவில் உள்ள ரஷிய தூதரக அதிகாரிகள் உதவியதாக தில்லி காவல் துறை தெரிவித்ததை கவனத்தில் எடுத்துக்கொண்டு நீதிபதிகள் கூறியதாவது: தற்போதைய வழக்கில் இந்தியா-ரஷியா உறவை பாதிக்கும் வகையில், எந்த உத்தரவையும் பிறப்பிக்க உச்சநீதிமன்றம் விரும்பவில்லை.
இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பது தொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் தில்லி காவல் துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றத்திடம் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ உறுதி அளித்துள்ளாா். அதுதொடா்பாக 2 வாரங்களில் அவா் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனா்.