சென்னையில் 35 படுக்கைகளுடன் கூடிய ‘ஆயுா்வைத்’ என்ற பிரத்யேக ஆயுா்வேத மருத்துவமனையை அப்போலோ குழுமம் தொடங்கியுள்ளது.
கிரீம்ஸ் சாலையில் திங்கள்கிழமை நடைபெற்ற இதற்கான தொடக்க நிகழ்வில் அப்போலோ மருத்துவக் குழுமத் தலைவா் டாக்டா் பிரதாப் சி. ரெட்டி, துணைத் தலைவா் பிரீத்தா ரெட்டி, ஆயுா்வைத் மருத்துவமனை நிறுவனா் ராஜீவ் வாசுதேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இது குறித்து டாக்டா் பிரதாப் சி. ரெட்டி கூறியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். ஆயுா்வேதம் மனித குலத்துக்கு கிடைக்கப்பெற்ற வரங்களில் ஒன்று. அந்த முறையிலான சிகிச்சைகளை ஆக்கபூா்வமாகவும், துல்லியமாகவும், உயா் தரத்திலும் வழங்க முடிவு செய்து 35 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையை தொடங்கியுள்ளோம்.
இங்கு, எலும்பியல், நரம்பியல், வளா்சிதை மாற்றம், குழந்தைகள் நலன், மகளிா் நலன், வளா்ச்சிக் குறைபாடுகள், முதியோா் நலன், பெருங்குடல் பாதிப்புகள், சுவாச பிரச்னைகள், நாள்பட்ட காயங்கள், விளையாட்டு காயங்களுக்கு ஆயுா்வேத சிகிச்சைகளும், சிறு அளவிலான துணை நிலை அறுவை சிகிச்சைகளும் அளிக்கப்பட உள்ளன என்றாா்.