சட்டவிரோத பணப் பரிமாற்ற புகார் தொடர்பாக சென்னையில் "விக்' நிறுவனத்தில் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனர்.
தமிழகத்தில் திருச்செந்தூர், பழனி, திருத்தணி, வேளாங்கண்ணி, ஆந்திர மாநிலம் திருப்பதி உள்பட பிரபலமான வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் வேண்டுதலுக்காக தலைமுடியை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்தத் தலைமுடியை மொத்தமாக பெறுவதுடன், அழகு நிலையங்களிலும், சலூன் கடைகளிலும் தலைமுடியைப் பெறும் சில தனியார் நிறுவனங்கள், அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.
உலக அளவில் தலைமுடி தேவை அதிகரித்துள்ள நிலையில், இந்த வணிகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டி வருகின்றன. மேலும், அதிக லாபம் ஈட்டும் ஆசையில் சட்டவிரோதமாக சரக்கு பெட்டக லாரிகளில் தலைமுடியை மியான்மர், வங்கதேசம், நேபாளம் வழியாக சீனாவுக்கு கடத்திச் சென்று விற்கின்றன. சீன நிறுவனங்கள் இந்த முடியைப் பயன்படுத்தி "விக்' தயாரித்து பெரிய நிறுவனங்களுக்கு வழங்குவதாகவும், அந்த நிறுவனங்கள் தங்களது "பிராண்ட்' பெயரில் அவற்றை விற்பனை செய்து பெரும் லாபம் ஈட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிறுவனங்கள் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக அமலாக்கத் துறையினருக்குப் புகார்கள் வந்தன. இதனடிப்படையில் அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணையில், அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியை மையமாகக் கொண்டு சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெறுவது அமலாக்கத் துறையினருக்கு தெரியவந்தது.
அதோடு தலைமுடி மூலம் கோடிக்கணக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதும், கோயில்களிலிருந்து தலைமுடியை சேகரிக்கும் நிறுவனங்கள் போலி நிறுவனங்களை உருவாக்கி சரக்கு பெட்டக லாரிகளில் நேபாளம், வங்கதேசம், மியான்மர் நாடுகளுக்கு கடத்திச் சென்று மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்த மோசடியில் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்குத் தொடர்பு இருப்பதாக அமலாக்கத் துறை கருதியது.
இதைத் தொடர்ந்து, சென்னை கோயம்பேடு, நெற்குன்றத்தில் விக் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் லோகேஸ்வரன் என்பவரது வீடு, அலுவலகங்கள், அமைந்தகரை மேத்தா நகரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் முனுசாமி வெங்கடேசன் வீடு, கோடம்பாக்கம் வெள்ளாளர் தெருவில் "விக்' ஏற்றுமதி நிறுவனம் நடத்திவரும் வெங்கடேசன் வீடு, அதே பகுதியில் உள்ள மற்றொரு வீடு ஆகியவற்றில் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனை செய்தனர்.
அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க முடியும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.