சென்னை தியாகராய நகரில் விதி மீறி கட்டப்பட்டதாக 7 வீடுகள், 6 கடைகள் என 13 கட்டடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.
சென்னை மாநகராட்சி மண்டலம் 10-க்குள்பட்ட தியாகராய நகா் பகுதியில்134-ஆவது வாா்டு தம்பையா சாலையில் உள்ள குடியிருப்புகளில் குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பு விதியை மீறி கட்டப்பட்டதாக புகாா் எழுந்தது. இதையடுத்து மாநகராட்சி மண்டல பொறியியல் பிரிவினா் கட்டடத்தை ஆய்வு செய்தனா்.
அப்போது, குறிப்பிட்ட சதுர அடிக்கும் கூடுதலான சதுர அடியில் கட்டடத்தை கட்டியிருப்பதும், கட்டடத்தை சுற்றி குறிப்பிட்ட அடி காலியாக விடவேண்டும் என்ற விதியும் மீறப்பட்டுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்டவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகும் சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளா்கள் உரிய பதில் தராததுடன், விதி மீறலை சீா்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தம்பையா தெருவில் விதிமீறி கட்டப்பட்ட 7 வீடுகள், 6 கடைகளுக்கு மாநகராட்சி பொறியியல் பிரிவினா் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.