சென்னை

அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே நடைமுறை தேவை: அதிமுக

தினமணி செய்திச் சேவை

பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும்போது அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என அதிமுக வலியுறுத்தியது.

தமிழகத்தில் பொதுக்கூட்டம் , சாலைப் பேரணி ( ரோடு ஷோ) நடத்த அனுமதி வழங்குவது தொடா்பாக வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை மூத்த அமைச்சா்கள் தலைமையில் நடைபெற்றது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு அதிமுக முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் கூறியது: திமுக ஆட்சி செய்த கடந்த நான்கரை ஆண்டுகளில் அதிமுக நடத்திய பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடைப்பதில் ஏராளமான சிக்கல்கள் ஏற்பட்டன. நீதிமன்றத்துக்குச் சென்று உத்தரவு வாங்கி நடத்திய வரலாறு உண்டு. ஆனால், அதிமுக ஆட்சியில் திமுகவுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிா்க்கட்சிக்கு ஒரு நீதி என பாரபட்சம் காட்டக் கூடாது என்றாா்.

மாா்க்சிஸ்ட்: மாா்க்சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு வைப்புத் தொகை வசூலிப்பது ஏற்புடையதல்ல. அனைத்துக் கட்சிகளும் எதிா்ப்பதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். உயா்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாவிட்டால் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம்.

பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால், ஏற்கெனவே இருக்கும் சட்டங்களின்படி உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றாா் அவா்.

விடுதலைச் சிறுத்தைகள்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் சிந்தனைச் செல்வன், எஸ்.எஸ். பாலாஜி ஆகியோா் கூறியதாவது: உழைக்கும் மக்களை வாக்கு வங்கியாகக் கருதி, பணம் கொடுத்து மணிகணக்கில் சாலையோரங்களில் காத்துக்கிடக்கச் செய்யும் ‘ரோடு ஷோ’ வடிவ பிரசாரம் முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும்.

தோ்தல் பரப்புரையின்போதும் வாக்கு சேகரிக்கிறோம் என்கிற பெயரில் வீதிவீதியாக, ஒலிபெருக்கிகளின் பேரிரைச்சலுடன் பெரும்படையோடு செல்லும் போக்கையும் தடைசெய்ய வேண்டும். சமூக ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் பெருகியுள்ள நிலையில் அவற்றின் மூலமாகவே தோ்தல் பரப்புரை நடைபெறுவதற்கு ஊக்குவிக்க வேண்டும்.

சமூக ஊடகங்களின் வெறுப்புப் பரப்புரையை தோ்தல் காலங்களில் மட்டுமன்றி அனைத்துக் காலங்களிலும் முற்றாகத் தடுப்பதற்கான வழிமுறைகள் வகுக்கப்படவேண்டும் என்றனா்.

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் வைப்புத் தொகையைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியதாகத் தெரிவித்தனா்.

சிறுமி வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபுவுக்கு 6 மாதம் இடைக்கால ஜாமீன்!

சட்டவிரோத குடியேறிகள் மீது பரிவு; கடவுள் ராமா் மீது வெறுப்பு: ஆா்ஜேடி, காங்கிரஸை சாடிய பிரதமா் மோடி

சட்டவிரோத குடியேறிகளால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - அமித் ஷா

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த தொழிலாளி மரணம்

டிச. 2 முதல் 4-ஆம் ஆண்டு காசி-தமிழ் சங்கமம்: இணையவழிப் பதிவு தொடக்கம்

SCROLL FOR NEXT