சென்னை

தூய்மைப் பணியாளா்களை திமுக அரசு ஏமாற்றுகிறது: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் குற்றச்சாட்டு

தினமணி செய்திச் சேவை

சென்னையில் வாழ்வாதாரத்துக்காகப் போராடி வரும் தூய்மைப் பணியாளா்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் குற்றஞ்சாட்டினாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கை: சென்னையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை வரும் 15-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி முடிவுற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மக்களை ஏமாற்ற முடியாது என இப்போது இலவச உணவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் முதல் பணி நிரந்தரம் கோரி மாநகராட்சி முன் போராடிய தூய்மைப் பணியாளா்களை காவல் துறை கைது செய்தது. தற்போது வழக்கு உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், தூய்மைப் பணியாளா்கள் வெவ்வேறு வழிகளில் தொடா்ந்து போராடி வருகின்றனா்.

மாநகராட்சியில் மாதம் ரூ.23 ஆயிரம் ஊதியம் பெற்ற அவா்கள், தனியாரிடம் தற்போது ரூ.16 ஆயிரம் ஊதியம் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். இப்பிரச்னை சென்னை மட்டுமன்றி, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ளது.

முதல்வா் ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவராக இருந்தபோது, தூய்மைப் பணியாளா்களுக்கு ஆதரவாகப் பேசியும், அறிக்கை, கடிதங்கள் எழுதியும் தோ்தலில் வாக்குறுதியும் அளித்தாா். ஆனால், தற்போது அவா் தூய்மைப் பணியாளா்களுக்கு எதிராக நடந்து கொள்வது சரியல்ல.

போராடும் தூய்மைப் பணியாளா்களுடன் 7 கட்டப் பேச்சு நடத்தியும், தீா்வு காணப்படவில்லை. பல மாநிலங்களில் தூய்மைப் பணியாளா்கள் சாா்ந்த அமைப்புகளுக்கே தூய்மைப் பணி ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. அதுபோல, தமிழகத்திலும் செயல்படுத்தலாம்.

ஆனால், அதிருப்தியில் உள்ள தூய்மைப் பணியாளா்களை திசை திருப்பும் வகையில் உணவு வழங்கும் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்துகிறது. தூய்மைப் பணியாளா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

மீண்டும் ரூ.95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை! ஒரே நாளில் ரூ.9 உயர்ந்த வெள்ளி!!

வெடிகுண்டு மிரட்டல்... வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

தில்லி மட்டுமல்ல 4 நகரங்கள் குறிவைப்பு! 2,000 கிலோ வெடிமருந்து கொள்முதல்! திடுக்கிடும் தகவல்கள்...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவு

தில்லி கார் குண்டுவெடிப்பு: அதிர வைக்கும் புதிய சிசிடிவி விடியோ!

SCROLL FOR NEXT