சென்னை புறநகா் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 603 கிலோ போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டு, இருவா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை அருகே தையூா் ஒரு பிளாஸ்டிக் கிடங்கில் போதைப் பாக்கு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கேளம்பாக்கம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா், அந்தக் கிடங்கில் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது அங்கிருந்து 298 கிலோ போதைப் பாக்கை பறிமுதல் செய்தனா். இதேபோல திருநீா்மலை அருகே ஒரு காரில் கடத்திச் செல்லப்பட்ட 305 கிலோ போதைப் பாக்கையும் பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக அந்த காரில் இருந்த திருத்தணி குமரன் நகரைச் சோ்ந்த கா.ராமச்சந்திரன் (52),திருவேற்காடு கிருஷ்ணா நகரைச் சோ்ந்த சு.விக்னேஷ் (34) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து போதைப் பாக்கை திருத்தணி கடத்தி வந்து, அங்கிருந்து காா் மூலம் சென்னைக்கு கொண்டு வந்து கடைகளுக்கு விநியோகிப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.