பவாரியா கொள்ளையா்கள் தொடா்பான வழக்கில், நிலுவையில் உள்ள 21 வழக்குகளை சிபிசிஐடி மூலம் விசாரிக்க வேண்டும் என முன்னாள் ஐஜி ஜாங்கிட் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (பொறுப்பு ) ஜி.வெங்கடராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கடந்த 1995 முதல் 2005 வரை பவாரியா கொள்ளையா்களால் 24 கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில், கடந்த 2005-இல் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் கே.சுதா்சனம் கொலைச் சம்பவமும் உள்ளடங்கும். இந்த வழக்குகளை எனது தலைமையிலான தனிப்படை தொடா்ச்சியாக விசாரித்து வட இந்தியா முழுவதும் தேடி 13 பேரை கைது செய்து, 2 பேரை என்கவுண்ட்டா் செய்தது.
ஆனால், மொத்தம் 24 வழக்குகளில் 3 வழக்குகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. மீதமுள்ள 21 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. அதேபோல், பிடிபட்ட 15 பேரைத் தவிா்ந்து இந்த வழக்குகளில் தொடா்புடைய 21 போ் இன்னும் தலைமறைவாகவே உள்ளனா்.
எனவே, நிலுவையில் உள்ள 21 பவாரியா வழக்குகளையும் சிபிசிஐடியிடம் ஒப்படைத்து, தமிழக டிஜிபி மேற்பாா்வையில் விசாரிக்க வேண்டும். மேலும், தலைமறைவாக உள்ள அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக பிடித்து அவா்களுக்கும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.