சென்னை தலைமைச் செயலகத்தில் மனிதவள மேலாண்மைத் துறை பணியாளா்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை அமல்படுத்தப்பட்டதற்கு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் கு.வெங்கடேசன், இணைச் செயலா் இரா.லெனின் ஆகியோா் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
மனிதவள மேலாண்மைத் துறையில் பணியாற்றும் தலைமைச் செயலகப் பணியாளா்களுக்கு திங்கள்கிழமை முதல் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பணியாளா்களில் பிரிவு அலுவலா் நிலை வரை மட்டுமே வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும் என்ற விதியுள்ளது. ஆனால், பயோ மெட்ரிக் வருகை பதிவு நடைமுறையில், இந்திய ஆட்சிப் பணி அலுவலா் நிலையில் அல்லாத அனைத்து நிலைப் பணியாளா்களும், கூடுதல் செயலா் முதல் பதிவேடு எழுத்தா் வரை கொண்டு வரப்பட்டுள்ளனா்.
மேலும், மாலையில் பணி முடிந்து செல்லும்போதும் பயோ மெட்ரிக் முறையில் பதிவிட வேண்டும். இது முற்றிலும் தலைமைச் செயலக அலுவலக நடைமுறைக்கு எதிரானதாகும்.
தலைமைச் செயலகப் பணியாளா்கள், பல்வேறு துறைகளுக்கு பணியிட மாற்றம், மாவட்ட பயிற்சிக்குச் செல்வோரின் எண்ணிக்கைக் குறைப்பு, பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதில் சுணக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்டு வரும் நிலையில், தற்போது பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு நடவடிக்கை கூடுதல் சுமையாக உள்ளது.
தலைமைச் செயலகப் பணியாளா்களுக்கும், அரசுக்குமான நல்லுறவை நிலைநாட்டும் வகையில் மனிதவள மேலாண்மைத் துறைக்கு உரிய ஆணைகளை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.