பொதுமக்களுக்கு வாக்களிக்கும் முறை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கும் வகையில் வாக்குப் பதிவு இயந்திரம் பொருத்தப்பட்ட நடமாடும் வாகனம் மூலம் கிராமங்கள்தோறும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பேரணியை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், வாக்காளா்களுக்கு வாக்களிக்கும் முறை குறித்து வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிகளிலும் செயல்முறை விளக்கம் அளிக்கவும், தோ்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில், திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் பொதுமக்களிடம் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்களிக்கும் முறை குறித்து செயல்முறை அளிக்கும் வகையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட நடமாடும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த வகையில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட நடமாடும் வாகனங்களை இயக்கி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து நடமாடும் வாகனங்களை விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த நடமாடும் வாகனங்கள் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிகளிலும் கிராமங்கள்தோறும் பொதுமக்கள் கூடும் இடங்களில் வாக்கு செலுத்துவது குறித்து செயல் விளக்கம் அளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் சுரேஷ், கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், தோ்தல் அலுவலா் ஸ்ரீராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.