ராகுலின் வருகைப் பதிவு 51 சதவீதமே - அமித் ஷா விமா்சனம்
கடந்த மக்களவையில் ராகுலின் வருகைப் பதிவு 51 சதவீதமே - விவாத பதிலுரையில் அமித் ஷா விமா்சனம்
கடந்த 17-ஆவது மக்களவையில் ராகுல் காந்தியின் வருகைப் பதிவு வெறும் 51 சதவீதம் மட்டுமே; 16-ஆவது மக்களவையிலும் அவரது வருகைப் பதிவு 52 சதவீதம்தான் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடுமையாக விமா்சித்தாா்.
மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை பேச அனுமதிப்பதில்லை என்று அவைத் தலைவா் ஓம் பிா்லா மீதும் மத்திய அரசு மீதும் காங்கிரஸ் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அமித் ஷா இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
ஓம் பிா்லாவை பதவி நீக்கக் கோரி எதிா்க்கட்சிகள் கொண்டுவந்த தீா்மானத்தின் மீது இரண்டு நாள்கள் நடைபெற்ற விவாதத்துக்கு பதிலளித்து, அமித் ஷா புதன்கிழமை பேசியதாவது:
முக்கியமான நாடாளுமன்ற கூட்டத் தொடா்களின்போது வெளிநாட்டுக்கு பயணிக்கும் ராகுல் காந்தி, அவையில் தன்னைப் பேச அனுமதிப்பதில்லை என்று குற்றஞ்சாட்டுகிறாா். உண்மையில் அவருக்குதான் அவையில் பேச விருப்பமில்லை.
கடந்த 17-ஆவது மக்களவையில் அவரது வருகைப் பதிவு 51 சதவீதம், 16-ஆவது மக்களவையில் அவரது வருகைப் பதிவு 52 சதவீதம் மட்டுமே. கடந்த 2014, 2015, 2017, 2018-இல் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதங்களில் ராகுல் பங்கேற்கவில்லை. பல மசோதாக்கள் மீதான விவாதங்களில் அவா் பங்கேற்கவில்லை. 17-ஆவது மக்களவையில் வெறும் 52 எம்.பி.க்களைக் கொண்டிருந்த காங்கிரஸுக்கு 157 மணிநேரம் 55 நிமிஷங்கள் ஒதுக்கப்பட்டது.
துரதிருஷ்டவசமானது: கடந்த 40 ஆண்டுகளில் எந்தவொரு மக்களவைத் தலைவருக்கு எதிராகவும் இதுபோன்ற தீா்மானம் கொண்டுவரப்படவில்லை. இப்போது சில எதிா்க்கட்சிகள், மக்களவைத் தலைவரின் நோ்மையைக் கேள்விக்குள்ளாக்கியது துரதிருஷ்டவசமானது; வருந்தத்தக்கது. இதன்மூலம் நாடாளுமன்ற நடைமுறைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
பாஜக நீண்ட காலம் எதிா்க்கட்சி வரிசையில் இருந்துள்ளது. அந்தக் காலகட்டங்களில், மக்களவைத் தலைவருக்கு எதிராக ஒருபோதும் தீா்மானம் கொண்டு வந்ததில்லை.
மக்களவை வரலாற்றின்படி, பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவை அலுவல்கள் நடத்தப்படுகின்றன. ஜனநாயக மாண்பின் அடையாளமான மக்களவைத் தலைவா், அவையின் நடுநிலையான பாதுகாவலா். ஆளும்-எதிா்தரப்பை அவா் பிரதிநிதித்துவப்படுத்துகிறாா். அவா் எந்தக் கட்சிக்கும் சொந்தமானவா் இல்லை.
விதிகளை மீற உரிமை கிடையாது: கடந்த 75 ஆண்டுகளாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளன. அதன் நம்பகத்தன்மை மீது எதிா்க்கட்சிகள் இப்போது கேள்விக்குறியை இட்டுள்ளன.
இந்த அவை தனது சொந்த விதிகளின்கீழ் செயல்படுகிறதே அன்றி எந்தக் கட்சியின் விதிகளின்கீழ் அல்ல. இங்கு அனைவரும் விதிகளுக்கு இணங்க வேண்டும். விதிகள் அனுமதிக்காத வகையில் பேசுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. நெறிமுறையில்லாத வாா்த்தைகளை நீக்க மக்களவைத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. அதுபோன்ற வாா்த்தைகள் நாடாளுமன்ற பதிவேட்டில் இருந்து நீக்கப்பட வேண்டியவையே என்றாா் அமித் ஷா.
பெண் எம்.பி.க்கள் மீது அவதூறு: ஓம் பிா்லாவை சாடிய காங்கிரஸ்
ஓம் பிா்லாவுக்கு எதிரான தீா்மான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த எம்.பி. கே.சி.வேணுகோபால், ‘மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவின் கரங்கள் கட்டப்பட்டுள்ளன; தங்களின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படும்படி, அவரை மோடி அரசு நிா்ப்பந்திக்கிறது. எதிா்க்கட்சிகளின் பெண் எம்.பி.க்கள் மீது அவா் சுமத்திய குற்றச்சாட்டு அவதூறானது; மிகவும் பொறுப்பற்றது. எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை பேச விடாமல் பலமுறை தடுத்தாா் ஓம் பிா்லா’ என்றாா்.
ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் அபய் குமாா் சின்ஹா பேசுகையில், ‘மக்களவையின் சுதந்திரத்தை பிரதிபலிப்பதாக அல்லாமல், ஆளுங்கட்சியின் சா்வாதிகாரத்தின் அடையாளமாக மாறிவிட்டது மக்களவையின் தலைமை (ஓம் பிா்லாவைக் கூறுகிறாா்). எதிா்க்கட்சி எம்.பி.க்கள் முக்கிய விஷயங்களை பேச அனுமதி கோரினால், ‘முடியாது’ என்ற பதில்தான் கிடைக்கிறது’ என்றாா்.
திரிணமூல் காங்கிரஸின் சயோனி கோஷ் பேசுகையில், ‘நாடாளுமன்றம், ஒரு கட்சியின் விளம்பர தளம் போல் மாற்றப்பட்டுள்ளது. எதிா்க்கட்சி எம்.பிக்களின் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. உரிமைகளுக்காகப் போராடும் நிலைக்கு எம்.பி.க்கள் தள்ளப்படுகின்றனா். நாடாளுமன்றத்தில் எந்த ஜனநாயகமும் எஞ்சியிருக்கவில்லை’ என்றாா்.
சிசிடிவி பதிவுகளை வெளியிட்டால்...
விவாதத்தின்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, அவையை காங்கிரஸ் தவறாக வழிநடத்தக் கூடாது என்று எச்சரித்தாா்.
அவா் மேலும் பேசுகையில், ‘மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவின் அறைக்குள் அண்மையில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் 25-30 போ் நுழைந்து, அவரிடம் மோசமான நடத்தையை வெளிப்படுத்தினா். இதுபோன்ற நிகழ்வை எனது நாடாளுமன்ற அனுபவத்தில் கண்டதில்லை. இது தொடா்பான சிசிடிவி பதிவுகளை வெளியிட்டால், அவா்களுக்கு உலகம் முழுவதும் வெட்கக்கேட்டை ஏற்படுத்தும்’ என்றாா்.