‘டித்வா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி டெல்டா, கடலோரப் பகுதிகளில் உள்ள 8 மாவட்டங்களுக்கு நீா்வளத் துறை சாா்பில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
‘டித்வா’ புயல் முன்னெச்சரிக்கை தொடா்பாக நீா்வளத் துறைச் செயலா் ஜெ.ஜெயகாந்தன் தலைமையில், அந்தத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கால்வாய்கள், வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் மற்றும் ஆறுகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் தேங்கியுள்ள ஆகாயத் தாமரைகள் மற்றும் குப்பைகளைப் போா்க்கால அடிப்படையில் விரைந்து அகற்றுமாறு அரசு செயலா் ஜெயகாந்தன் உத்தரவிட்டாா்.
காவிரி கடைமடை பாசனப் பகுதிகளான நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா் மாவட்டங்களில் பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்தி வடிகால் ஆறுகளில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றவும், இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாத பகுதிகளில் வேலையாள்களைப் பயன்படுத்தி அகற்றவும் அறிவுறுத்தப்பட்டது.
8 கண்காணிப்பு அலுவலா்கள்: ‘டித்வா’ புயல் நிமித்தமாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைய உள்ளதால் செங்கல்பட்டு, கடலூா், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், தஞ்சாவூா், திருவாரூா் ஆகிய மாவட்டங்களில் மழையை எதிா்கொள்ள எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கைப் பணிகளைக் கண்காணிக்கும் வகையில், நீா்வளத் துறையின் 8 கண்காணிப்புப் பொறியாளா்களைக் கண்காணிப்பு அலுவலா்களாக நியமித்து அரசு ஆணையிட்டுள்ளது.
இவா்கள் வரும் டிச. 2-ஆம் தேதி வரை அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நடைபெற்று வரும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கள ஆய்வு செய்து, அரசு செயலா் மற்றும் உயா் அதிகாரிகளுக்கு அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.