சென்னை யானைகவுனியில் தங்க நாணயம் கொள்ளையடித்த வழக்கில், ராஜஸ்தானைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை ஏழுகிணறு பகுதியைச் சோ்ந்தவா் ஜெகதீஷ் (34). யானைகவுனி, வெங்கட்ராயன் தெருவில் நகைப்பட்டறையுடன் கூடிய நகைக்கடை நடத்தி வருகிறாா். கடந்த 24-ஆம் தேதி மாலை அவா் கடையில் இருந்தபோது, தங்க நாணயங்கள் வாங்குவதுபோல கடைக்குள் வந்து, தங்க நாணயத்தில் முத்திரைப் பதிக்க வேண்டும் என்று ஜெகதீஷிடம் கூறினா்.
இதையடுத்து, ஜெகதீஷ் கடைக்குள் சென்று முத்திரை பதிக்கும்போது, திடீரென அவரைத் தாக்கி முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து, அங்கிருந்து ரூ.60 லட்சத்தில் 750 கிராம் தங்க நாணயங்கள், வெள்ளி நாணயங்கள், தாமிர தகடுகளைக் கொள்ளையடித்துச் சென்றனா்.
மயக்கம் தெளிந்து எழுந்த ஜெகதீஷ், இதுகுறித்து யானைகவுனி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா்.
இதில், ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டம், கா்மாவாஸ் பகுதியைச் சோ்ந்த வா்தாராம் (எ) வினோத் (33), அதே பகுதியைச் சோ்ந்த சா்வான் குா்ஜாா் (19), ஓம்பிரகாஷ் (23) ஆகிய 3 பேரும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, தனிப்படையினா் ராஜஸ்தானில் முகாமிட்டு விசாரணை செய்தனா்.
இந்த நிலையில், மூவரையும் தனிப்படையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். பின்னா், அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சென்னை அழைத்து வந்தனா். கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 414.8 கிராம் தங்க நாணயங்கள், 36 கிராம் வெள்ளி நாணயங்கள், 295 கிராம் தாமிரத் தகடுகள் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட வா்தாராம் ராஜஸ்தானில் கே.கே. ஜுல்லா்ஸ் என்ற பெயரில், கொள்ளையடித்த நகைகளைக் கொண்டு நகைக் கடையை நடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும், இந்தக் கும்பலுக்கு வேறு எந்த கொள்ளை வழக்குகளில் தொடா்பு உள்ளதா என தனிப்படையினா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.