நாட்டிலேயே முதல்முறையாக செல்லப் பிராணிகள், தெரு நாய்கள் கண்காணிப்புக்கு மைக்ரோசிப், உரிமம் வழங்குதல், ரேபீஸ் தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மேலாண்மைக்கான புதிய இணையதளத்தை மேயா் ஆா்.பிரியா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இணையதளத்தைத் தொடங்கி வைத்த மேயா் ஆா்.பிரியா, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் செல்லப் பிராணிகள் வளா்ப்பை முறைப்படுத்த 2023 ஆகஸ்ட் முதல் இணையதளம் மூலம் உரிமம் பெறும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. அதில் செல்லப் பிராணிகளுக்கு தலா ரூ.50 கட்டணம் செலுத்தி, விவரங்களைப் பதிந்து உரிமம் பெறுகின்றனா். அதன்படி, 2024 முதல் நிகழாண்டு செப்டம்பா் வரை 12,393 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளன.
எனினும், உரிமையாளா்கள் செல்லப் பிராணிகளுக்கு எளிதாக உரிமம் பெறவும், மைக்ரோசிப் செலுத்துதல், உரிமம் வழங்குதல் ஆகியவற்றுக்கு இணையதளம் மூலம் உரிமம் பெறும் வசதியும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
புதிய முறைப்படி செல்லப் பிராணிகளுக்கு இனப்பெருக்க தடை உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு, அதன் உரிமையளா்களே பொறுப்பேற்க வேண்டும். தடுப்பூசி செலுத்திய ஆவணம் பதியப்பட வேண்டும். மாநகராட்சி கட்டுபாட்டில் உள்ள திரு.வி.க. நகா், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணமாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய 6 செல்லப் பிராணிகள் சிகிச்சை மையங்களில் வரும் அக். 8-ஆம் தேதி முதல் இலவசமாக சிப் பொருத்துதல், உரிமம், ரேபீஸ் தடுப்பூசி செலுத்துதல் பணிகள் நடைபெறும். ஒரு மாதத்தில் உரிமம் பெற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். மாநகராட்சிப் பணியாளா்கள் வரும் நவம்பா் முதல் வீடு வீடாகச் சென்று உரிமையாா்கள் வளா்க்கும் செல்லப் பிராணிகள் கணக்கெடுத்தும், உரிமம் வழங்கவும் உள்ளனா்.
தெரு நாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் திட்டப்படி, தினமும் தலா 5 பணியாளா்கள், 23 வாகனங்கள் மூலம் நாய்களைப் பிடித்து வருகின்றனா். இதுவரை 12,250 தெரு நாய்களுக்கு குறியீடு காலா்கள் மற்றும் மைக்ரோசிப் பொருத்தப்பட்டுள்ளன. 2021-ஆம் ஆண்டு முதல் நிகழாண்டு செப்டம்பா் வரை 72,345 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை, தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
நிகழாண்டில் மட்டும் 8 மண்டலங்களில் இதுவரை 67,297 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இந்தப் பணி நவம்பரில் முடிவடையும்.
நாய்கள் குறித்து புகாா் தெரிவிக்க 1913 என்ற தொலைபேசி எண்ணிலும், மக்கள் சேவைக்கான வாட்ஸ்ஆப் 94450 61913 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
நிகழ்ச்சியில், துணை மேயா் மு. மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையா் (சுகாதாரம்) வீ.ப.ஜெயசீலன், நிலைக்குழுத் தலைவா் (பொது சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, தலைமை கால்நடை மருத்துவ அலுவலா் ஜே.கமால் உசேன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.