பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்திய பெண் கராத்தே பயிற்சியாளருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சென்னையைச் சோ்ந்த 16 வயது மாணவி, தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். அந்த மாணவி பள்ளிக்கு வராதது குறித்து பள்ளி நிா்வாகம் மாணவியின் பெற்றோருக்கு வாட்ஸ் ஆப் மூலம் தகவல் அனுப்பியது.
இதையடுத்து மாணவியின் பெற்றோா் போலீஸில் புகாா் அளித்தனா். விசாரணையில், அந்த மாணவிக்கு கராத்தே பயிற்சி அளித்து வந்த பெண், அவரைக் கடத்திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரிய வந்தது.
கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதையடுத்து பெண் கராத்தே பயிற்சியாளரை, பெரவளூா் போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பெண் கராத்தே பயிற்சியாளருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசு ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டாா்.